பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அறத்தின் குரல்


‘தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது முறையில்லை’ என்று அவன் தன் தந்தைக்கே அறிவுரை கூறத்தொடங்கிவிட்டான். “தந்தையாக இருந்தும் நீங்கள் உங்கள் புதல்வனாகிய எனக்குத் துரோகமே செய்ய நினைக்கிறீர்கள்!” என்று திருதராட்டிரனைப் பழித்துக் கூறினான். “பாண்டு என் தமையன்! அவன் இறந்து போய்விட்டதனால் அவனுடைய மக்களில் மூத்தவனாகிய தருமனுக்கு முடிசூட்டி இளவரசுப் பட்டமும் கட்டி விட்டேன். ஆகவே நீ சினம் கொள்வது எந்த வகையால் பார்த்தாலும் பிழையான செயலாகும்” என்று அவனுக்கு அறிவுரை கூறினான் திருதராட்டிரன்.

ஆனால் துரியோதனனோ தந்தையினுடைய இந்த அறிவுரையைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. “பாண்டவர்களை எனக்குச் சிறிதளவும் பிடிக்கவில்லை. அவர்களோடு நட்புக் கொண்டு வாழ இனியும் என்னால் முடியாது! சகோதரர்களும் சகுனி முதலியோர்களும் என் பக்கம் துணையாக இருக்கிறார்கள். எனக்குத் தனியான உரிமைகளும் வேண்டும்” என்று பகைமை கொழுத்த நெஞ்சத்துடனே துரியோதனன் தன் தந்தையிடம் வேண்டிக் கொண்டான்.


8. நனவாகிய கனவு

துரோணரிடமிருந்து விடுதலை பெற்றுத் தன் நாடு சென்ற யாகசேனன் அமைதியிழந்த மன நிலையோடு வாழ்ந்து வந்தான். முன்பே கூறியவாறு, ‘துரோணரைப் பழிக்குப்பழி வாங்குதல் - அர்ச்சுனனைப் பாராட்டிப் போற்றுதல்’ - என்ற இவ்விரண்டு எண்ணங்களும் அவன் மனத்தில் இடையீடில்லாமல் சுழன்று கொண்டிருந்தன. இதனாலேயே வேள்வி செய்யக் கருதி முனிவர்களை அழைத்தனுப்பி யிருந்தான் அவன். முனிவர்கள் வந்தார்கள். யாகசேனன் தன்