பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
73
 

 யாகசேனனின் இரண்டாவது மக்கட் செல்வமாக வெளிப்பட்டாள்.

பேரரசர்களெல்லோரும் வியந்து புகழத்தக்க அர்ச்சுனனின் வீரத்திற்குக் கைம்மாறாக அளிக்க இவள் சரியான கன்னிகைதான் என்று விம்மி நிறைந்தது யாகசேனன் உள்ளம். தனக்குக் கிடைப்பதற்கரிய பேறாகக் கிடைத்த அந்தப் புனித சுன்னிகையைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் அதே சமயத்தில் ‘இத்தகைய கன்னிகைகள் சாதாரணமான செயலை நிறைவேற்றுவதற்காக உலகில் பிறப்பதில்லை! இவர்கள் அசாதாரணமான அழகும் பண்பும் கொண்டு பிறப்பதைப் போலவே அதிசயமான பெருஞ்செயல்களையும் நிறைவேற்றி முடிப்பார்கள். சீதை பிறந்தாள். இராவணன் முதலிய அரக்கர்கள் அழிந்தார்கள். இப்போது இவள் பிறந்திருக்கிறாள்! இவளால் எந்தத் தீமையை, எந்தத் தீயவர்களை அழிக்க வேண்டும் என்பது இறைவன் கருத்தோ?’ - என வேறோர் தெய்வீகக் குரலும் அவன் இதயத்தின் அடித்தளத்திலிருந்து எழுந்தது. அர்ச்சுனன் தோள்களைத் தழுவி அவனை மணப்பதற்காகப் பாஞ்சாலியையும், தன்னைப் பெரிய அவமானத்திற்குள்ளாக்கிய துரோணரை அழித்து வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்குத் துட்டத்துய்மனையும் தனக்கு மக்களாக அளித்த விதியை வணங்கினான் பாஞ்சால மன்னன் யாகசேனன். கனவாக இருந்து மனத்தைக் குழப்பிய விருப்பங்கள், எண்ணங்கள் பலித்து விட்டால் அப்படிப் பலித்தவருக்கு ஏற்படுகின்ற மன அமைதி எதுவோ அதை யாகசேனன் அடைந்திருந்தான் இப்போது.

9. ஒற்றுமை குலைந்தது!

தருமனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியது குறித்து ஏற்கனவே பொறாமை கொண்டிருந்த துரியோதனன், தந்தையைச் சந்தித்துத் தனக்குச் சுதந்திரமான அரச