பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
75
 

 நாளடைவில் மாறுபட்டது. தன் புதல்வர்கள், பாண்டுவின் புதல்வர்களென்று வேறுபடுத்திப் பாராத அவனே துரியோதனனின் துர்ப் போதனையாலும் தன்னலத்தினாலும் மனம் மாறி வஞ்சகமாக நினைக்கத் தொடங்கி விட்டான். கர்ணன், சகுனி, துர்ச்சாதனன் முதலியவர்களும் சேர்ந்து பொறாமை பேசிப் பேசி அவன் மனத்தையும் அதன் வண்ணமாக மாற்றி விட்டார்கள். நல்லாசிரியராகவும், பாண்டவர்கள் கௌரவர்கள் ஒற்றுமையில் அக்கறை கொண்டவராகவும் இருந்த துரோணர் இந்த ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு ஏதாவது செய்திருக்கலாம். ஆனால், அவரோ அப்போது துட்டத்துய்ம்மனுக்குக் கல்வி, கலைகளைக் கற்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். அவரிடமே தன் மகனைக் கற்கச் செய்து அவரையே பழி வாங்கத் திட்டமிட்டிருந்தான் யாகசேனன். உயரிய நோக்கமும் கொள்கையினாற் பரந்த உள்ளமும் படைத்தவராகிய துரோணர் ‘கலை’ என்ற ஒன்றை மட்டும் தன்னைக் கொல்லவரும் அரசகுமாரனுக்கும் கற்பிக்கத் தயாராக இருந்தார். துட்டத்துய்ம்மன் அவரிடம் வந்து ‘தனக்கு வில்வித்தை முதலியவற்றைக் கற்பிக்க வேண்டும்’ - என்று பிரார்த்தித்தபோது அவன் இன்னானுடைய மகன் என்றும் இன்ன விதத்தில் தனக்கு வைரி என்றும் நன்கு தெரிந்திருந்தும் கூடத் துரோணரால் அவன் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. தன் உயிருக்கு எமனாக எவன் வளர்ந்து வருகிறானோ அவனுக்கே தாம் ஆசிரியனாக இருந்து உள்ளன்போடு கற்பிக்க ஒப்புக் கொண்டார் துரோணர். ‘சான்றோர்கள் பகைவனுக்கும் அருள் புரிகிற பண்பட்ட மனமுடையவர்கள்’ - என்னும் உண்மையை நிதர்சனமாக்கிக் காட்டியது துரோணரின் கருணை மிக்க இக்காரியம்.

இதனால் துரோணர் கூடத் திருதராட்டிரனையோ கெளரவர்களையோ சந்தித்து ஒற்றுமைக் குலைவைத் தடுப்பதற்கு வழியின்றிப் போயிற்று. தந்தை திருதராட்டிரனையும் தங்களது வஞ்சகக் கருத்துக்கு ஏற்றபடி