பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
76
அறத்தின் குரல்
 

மாற்றிவிட்ட துரியோதனாதியர், புரோசனன் என்னும் பெயரினனான தீய அமைச்சன் ஒருவனைத் தங்கள் கருத்துக்குத் துணையாக வைத்துக் கொண்டனர். புரோசனனும், சகுனி, கர்ணன், துரியோதனாதியர், ஆகியோரைப் போலப் பாண்டவர்கள் மேல் பொறாமை கொண்டவன் தான். புரோசனனும் துரியோதனாதியர்களும் கூடிச் சிந்தித்துப் பாண்டவர்களை அழித்தொழிக்க ஒரு வழி கண்டுபிடித்தனர். ‘வாரணாவதம் என்ற ஊரில் பாண்டவர் களைத்தனியே ஓர் அரக்கு மாளிகையில் வசிக்குமாறு தந்தையிடம் கூறி ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு அவர்கள் அந்த அரக்கு மாளிகையில் வசித்து வரும்போது ஒருநாள் இரவில் மாளிகைக்குத் தீ வைத்து விட வேண்டும்’ - இது தான் அவர்களது சிறுமை நிறைந்த உள்ளங்களுக்குத் தோன்றிய வழி.

இந்த எண்ணத்தை அவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சென்று திருதராட்டிரனிடம் கூறினார்கள். புறக் கண்களை இழந்து போய்க் குருடனாயிருந்த அந்தப் பெருவேந்தன் அகக் கண்களையும் இழந்து போனானோ என்றெண்ணும்படியாக அதற்கு இசைந்து அரக்கு மாளிகை கட்டவும் ஏற்பாடு செய்து விட்டான். இந்த ஏற்பாடு விதுரனுடைய மனத்தில் மட்டும் சந்தேகத்தை நுழையச் செய்தது. அரக்கு மாளிகை கட்டி முடிந்தவுடன் திருதராட்டிரன் பாண்டவர்களை அழைத்து விவரத்தைக் கூறினான். தருமன் அவன் கூறுவனவற்றைக் கவனமாகக் கேட்டான். “நீங்களும் கெளரவர்களும் இங்கு ஒரே இடத்தில் தங்கியிருந்தால் அது ஒருவருக்கொருவர் போட்டியும் பொறாமையும் வளர்வதற்குக் காரணமாகிவிடும். ஆகவே நீங்கள் வாரணாவத நகரத்தில் தனியே வசித்து உங்களது ஆட்சியை நடத்துவதே நல்லது. உங்களுக்கு வேண்டிய படைகளையும் மற்ற வசதிகளையும் கொடுத்துத் துணையாக இருப்பதற்குப் புரோசனன் என்னும் அமைச்சனையும் கூட அனுப்புகிறேன். உங்கள் ஒற்றுமைக் குலைவைத் தவிர்ப்பதற்கு இது தான் சரியான வழி -என்று