பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

77

திருதராட்டிரன் கூறினபோது தருமன் அதற்கு ஒப்புக் கொண்டு தன் சகோதரர்களுடனும் தாய் குந்தியுடனும் வாரணாவத நகரத்திற்குப் புறப்பட்டான்.

இவ்வாறு திருதராட்டிரன் பாண்டவர்களை வாரணா வதத்திற்கு அனுப்பியது தெரிந்ததும் துரியோதனாதியர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தீமைக்கு மகிழ்வது தானே சிறுமையின் இயல்பு? வாரணாவத் நகரில் தங்களுக்கென அமைக்கப்பட்டிருந்த அரக்கு மாளிகையிற் குடியேறி வசிக்கத் தொடங்கிய போது பாண்டவர்கள் கௌரவர்களின் சூழ்ச்சி எதையும் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் நாளாக நாளாக வாரணாவத் நகரில் தங்களை வசிக்குமாறு செய்ததில் ஏதோ சூது அடங்கியிருப்பதை உணரத் தலைப்பட்டனர். தங்களோடு உடனிருக்கும் மந்திரி புரோசனன் படைகளின் நிர்வாகத்தையும் வேறு சில முக்கிய நிர்வாகப் பொறுப்பு களையும் தானே வைத்து அதிகாரம் புரிந்து கொண்டு வந்ததைக் கண்டு அவன் மேல் சந்தேகம் கொண்டனர் பாண்டவர்கள். புரோசனனின் அளவுக்கதிகமான பணிவும் வணக்கமும், அவர்களை ஐயம் கொள்ளச் செய்தன. அவனுடைய சில மர்மமான நடத்தைகள், தங்களை ஆதரிப்பது போல் கேடுகளைச் செய்வனவாய் அமைவதையும் அவர்கள் நுட்பமாகக் கவனித்துக் கொண்டே வந்தார்கள். இவைகளுக்கெல்லாம் மேல் தங்களுக்காகக் கட்டப்பட்டிருந்த மாளிகை முழுவதும் அரக்கினாலேயே கட்டப்பட்டிருந்தது எதற்காக என்பது அவர்கள் சிந்தனையில் சந்தேகத்துக்குரிய வினாவாகப் பற்றி நின்றது.

இதை அறிந்து கொள்ளும் முயற்சியில் வீமன் ஈடுபட்டான். மாளிகை ஏன் அரக்கினால் கட்டப்பட்டிருக்கின்றது என்ற புதிருடன் வேறோர் பயங்கர உண்மையும் விடுபட்டது. அந்த அரக்கு மாளிகையைக் கட்டிய தச்சர்களில் முதன்மை வாய்ந்த ஒருவன் விதுரனுக்கு நண்பன். அவன் வீமனைத் தேடி வந்தான். அவனிடமிருந்து கெளரவர்களின் எல்லாச் சூழ்ச்சிகளையும் வீமன் அறிந்து