பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அறத்தின் குரல்

அழிவு உண்டாக்குவதற்கு முன்னால் சுரங்க வழியில் வெகு தொலைவு நடந்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தால் வீமன், தாய், சகோதரர் ஆகியோர்களோடு மிக விரைவாக நடந்து வந்திருந்தான். வழி நடந்த களைப்பும், இரவு நேரத்தின் உறக்கச் சோர்வும், அவர்களைப் பெரிதும் அலுத்துப் போகும்படியாகச் செய்திருந்தன. களைத்த நிலை தீர ஓர் இடத்தில் எல்லோரும் தங்கினார்கள். இரவின் அமைதியும் தனிமையும் எங்கும் நிறைந்து குடிகொண்டு இலங்கிற்று அவ்வனம். மெல்லிய காற்றும் காட்டினது இதமான சூழ்நிலையும் வீமனைத் தவிர யாவரையும் உறக்கத்தில் ஆழ்ந்து போகச் செய்திருந்தது. பலவிதமான குழப்பம் நிறைந்த சிந்தனைகளால் அவன் மனம் கலக்க முற்றிருந்த காரணத்தால் உடலில் களைப்பு இருந்தும் உறக்கம் அவனை நாடவில்லை, உறங்காமல் உடன் பிறந்தவர்களுக்கும் தாய்க்கும் காவலாக இருப்பதுபோல அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறு அவன் விழித்திருந்த போது அங்கே ஓர் வியப்புக்குரிய நிகழ்ச்சி நடந்தது! சிந்தனைப் போக்கில் இலயித்துப் போய் வீற்றிருந்த அவன், ‘கலின் கலின்’ என்று சிலம்புகள் ஒலிக்க யாரோ அடிபெயர்த்து நடந்து வரும் ஒலியைக் கேட்டுத் தலை நிமிர்ந்தான். ஆச்சரியகரமான ஒரு காட்சியை அப்போது வீமன் தன் எதிரே கண்டான். அழகே வடிவான இளம் பெண் ஒருத்தி அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள். மயிலின் சாயலும் அன்னத்தின் நடையும் விளங்க அவள் நடைபயின்று வந்து கொண்டிருந்த விதம் வீமனுடைய அடி மனத்தில் இனிய உணர்வையும் கவர்ச்சியையும் உண்டாக்கிற்று. வீமன் தலைநிமிர்ந்து தன்னை நோக்கியதும் அந்தப் பெண் சிரித்தாள். சிரிப்பா அது? முத்துப் போன்ற வெண்பற்களின் ஒளி அவன் கண் வழிப் புகுந்து இதய உணர்வைக் கரைத்தது. வீமனுடைய மனத்தைப் பற்றிக் கொண்டிருந்த கலக்கம் நிறைந்த சிந்தனைகள், அந்தச் சிரிப்பின் மோகனத்திலே ஐக்கியமாகி விட்டன.