பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அறத்தின் குரல்

மனிதர்களைக் கொன்று தின்னும் இயல்பும், கொடுமைகளும் நிறைந்தவன் தன் தமையன் என்றும் மனிதர்கள் எவரோ வந்திருக்க வேண்டும் என்பதை அனுமானித்தே தன்னைத் தன் தமையன் அங்கு அனுப்பினான் என்றும் அந்தப் பெண் கூறினாள். வீமனுக்கு உண்மை புரிந்தது. அந்தப் பெண் இடிம்பனின் தங்கை இடிம்பி. அவன் ஏவலால் அவள் வந்திருக்கிறாள் என்ற செய்திகளை வீமன் தானாகவே உய்த்துணர்ந்து கொண்டிருந்தான். உண்மை நன்கு விளங்கியதும் இவன் திகைத்தான். ஆனால் அஞ்சவில்லை.

“அப்படியானால் உன் தமையனிடம் சென்று நாங்கள் இருக்குமிடத்தைச் சொல்லி எங்களைக் கொல்லும்படிச் செய்யேன்” - தன் திகைப்பை மறைத்துக் கொண்டு சிரித்தவாறே இப்படிக் கேட்டுவிட்டு அவளை ஏறிட்டுப் பார்த்தான் வீமன். அவள் அனுதாபமும் அனுராகமும் ஒருங்கே வந்து திகழும் நோக்கு ஒன்றை அவன் மேல் செலுத்தினாள்.

“உங்களைத் தேடிக் கொண்டு வருகிறபோது கொல்ல வேண்டும் என்ற குருதி வெறியோடுதான் வந்தேன். ஆனால்... ஆனால்... இப்போது ...” அவள் தலை கவிழ்ந்தது. கால்விரல்கள் நிலத்தைக் கிளைத்தன.

“ஆனால் என்ன? இப்போது மனம் மாறிவிட்டதா?”

“ஆமாம்! ஆமாம்! என் மனத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். உங்களையும் அழைத்துக் கொண்டு இந்த வனத்தையும் இதில் ஏகபோகமாகக் கொடுங்கோல் ஆட்சிபுரியும் என் தமையனைவும் விட்டுவிட்டு எங்காவது ஓடிப் போய்விடலாம் போலிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் என் தமையன் இங்கே வந்துவிடுவான். அவன் வந்தால் உங்களையெல்லாம் உயிரோடு தப்பவிடமாட்டான். பேசாமல் என்னோடு புறப்பட்டு விடுங்கள். நாம் இருவரும் என் தமையனுக்குத் தெரியாமல் அருகிலுள்ள ஒரு மலைச்சிகரத்துக்கு ஓடிப் போய்விடலாம். உங்கள் அழகு