பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

85

பார்த்தால் ஓருண்மையினை அங்கே காணலாம். தன் தமையன் இறப்பதற்குக் காரணமாக இருந்த ஆண்மையும் ஆற்றலும் வந்தவுடனேயே தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவனைச் சேர்ந்தது என்றெண்ணும் போதே ஏற்பட்ட மகிழ்ச்சிதான் அவள் அடிமனத்தின் ஆழத்திலிருந்த அந்த உண்மை. மகிழ்ச்சியும் சோகமுமாக இரண்டுணர்வுகளும் நிரம்பி வழியும் நெஞ்சுடன் பாண்டவர்களும் குந்தியும் அங்கிருந்து காண அழுது தவித்துக் கொண்டிருந்தாள் அந்த இளநங்கை.

அப்போது இரவு படிப்படியாகக் கழிந்து கிழக்கு வெளுக்கத் தொடங்கியிருந்தது. வைகறையின் குளிர்ந்த காற்றும் பறவைகளின் பலவிதமான ஒலிகளும் கதிரவன் உதிப்பதற்கு இன்னும் அதிக நேரமில்லை என்பதை அறிவித்தன. நேரம் வளர வளரக் கிழக்கே அவன் வட்ட வடிவம் சிறிது சிறிதாக வளர்ந்து மேலே எழுந்தது. “பறவைகளே! இதோ கொடுமைக்கே இருப்பிடமாக இருந்த ஓர் அரக்கனின் பிணம் இங்கே கிடக்கிறது. நீங்கள் விருப்பம் போல் உண்ணலாம். நான் உங்களுக்கு விளக்காக இருக்கிறேன்” - என்று கூறிக்கொண்டே எழுவது போலிருந்தது கதிரவனுடைய தோற்றம், பொழுது விடிந்த பின்பும் வீமன் முதலியவர்களைக் விட்டுப் பிரிய மனமில்லாமல் தமையன் இறந்த துயரத்தையும் மறந்து அங்கேயே தயங்கித் தயங்கி நின்றான் இடிம்பி. அவள் உள்ளக் கருத்து வீமனுக்கும் தெரிந்தது. அந்தக் கருத்தை வரவேற்கும் கவர்ச்சியும் அனுதாபமுங்கூட அவனுக்கும் இருந்தது. என்றாலும் சந்தர்ப்பம், சூழ்நிலை முதலியவற்றை உத்தேசித்துத் தன் மறுமொழியைக் கடுமையாக அமைத்துக் கொண்டு கூறினான்; “பெண்மணியே! உன் உள்ளக் கருத்து எனக்கும் புரிகிறது. ஆனால், என் தமையன் திருமணமாகாதவன். இந்நிலையில் உன்னை நான் அங்கீகரிக்க இயலாமைக்கு வருந்துகின்றேன். தவிர இன்னோர் தடையும் உண்டு. நாங்களோ மானிடர்கள். நீயோ காட்டில் கொடிய