பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/91

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
89
 

அவள் அதை வெளிப்படையாக எவரிடமும் கூறிக் கொள்ளவில்லை. வீமனை அணுகித் தன் ஏற்பாட்டைக் கூறினாள் குந்தி.

“தாயே! உறுதியாக என்னையே அனுப்புங்கள். அந்த அரக்கனைத் தொலைத்துவிட்டு வருகிறேன். இந்த நகரில் நாம் தங்கியதற்கு அடையாளமான ஓர் நல்ல காரியமாக இருக்கட்டும் இது” -என்று தாயின் கருத்தை வரவேற்று ஆமோதித்தான் அவன்.

குறிப்பிட்ட நேரத்தில் சோற்று வண்டியோடு காட்டுக்குப் புறப்பட்டான் வீமன். கறிவகைகளும் சோறும் மலைப் போலக் குவிந்திருந்தது வண்டியில். கொஞ்சங்கூட அச்சமில்லாமல் உல்லாச யாத்திரை புறப்படுபவன் போன்ற மகிழ்ச்சியை மனத்திற் கொண்டிருந்தான் வீமன். காட்டை யடைந்ததும் பகாசுரனது குகை இருந்த இடத்தை, அங்கே சிதறிக் கிடந்த எலும்புக் குவியல்களால்தானே அனுமானித்துக் கொண்டு விட்டான். குகையைச் சுற்றி ஒரே கழுகுக் கூட்டம். நரிகளும் அலைந்து கொண்டிருந்தன. நிண நாற்றம் மூக்கைத் துளைத்தது. குகைக்கு இப்பால் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்திக் கொண்டு வீமன் தானே சோற்றையும் கறிவகைகளையும் காலி செய்யத் தொடங்கினான். பகாசுரனோடு யுத்தம் செய்வதற்கு வலிமை நாடியும் அவனைச் சண்டைக்கு இழுக்க ஒரு வழி தேடியும் தான் அவன் இதைச் செய்தான். வண்டியிலிருந்த சோற்றையும் கறி வகைகளையும் வீமன் ரசித்துச் சாப்பிட்டதினால் நேரம் கழிந்து கொண்டிருந்தது. வழக்கமாக உணவு வரும் நேரத்திற்கு அன்று உணவு வராததால் பகாசுரன் ஆத்திரத்தோடு குகையிலிருந்து வெளியே கிளம்பினான். குகைக்கு எதிரே மரத்தடியில் வண்டியில் தனக்காக உணவு வந்திருப்பதையும், யாரோ ஒருவன் அதை வேகமாகத் தின்று கொண்டிருப்பதையும் கண்டு அவன் கண்கள் சிவந்தன. பற்களைக் கடித்துக் கொண்டே மரத்தடியை நோக்கித்தாவிப் பாய்ந்து ஓடி வந்தான் அவன். வீமனோ அசுரன் வருகிறான்