பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

97

 முடிந்துவிட்டது. இறுதியாக அங்கே கூடியிருந்தவர்களில் ஒரே ஒருவன் தோல்விக்குத் தப்பி வெற்றி தனக்குத்தான் என்ற நம்பிக்கையோடு இருந்தான். அவன் தான் கர்ணன். அவன் மட்டுமென்ன? எல்லோருமே நம்பினார்கள் மகா வீரனாகிய கர்ணன் நிச்சயம் வெற்றி பெறுவான் என்று. கர்ணன் சாமர்த்தியமாக வில்லை வளைத்து அதில் அம்பையும் பொருத்தி விட்டான். ஆனால், அம்பு வில்லிலிருந்து புறப்படுவதற்கு முன் யாருமே எதிர்பாராத விதமாக வில்லின் நாண் நிமிர்ந்து அவன் தலையிலே தாக்கி முடியையும் அவனையும் கீழே விழும்படி செய்துவிட்டது. கர்ணனுக்கு மட்டுமின்றி அவையிலே கூடியிருந்த எல்லோருக்குமே பெரிய ஏமாற்றமாக அமைந்துவிட்டது. கர்ணன் இறுதியாகச் சுயம்வரத்திற்கு வந்திருந்த அத்தனை மன்னர்களும் தோற்றாகிவிட்டது.

‘நிபந்தனைப்படி பார்த்தால் திரெளபதி இனிமேல் கன்னியாகவே இருந்துவிட வேண்டியதுதான்’ -என்று துட்டத்துய்ம்மன் நினைத்துத் தயங்கிக் கொண்டிருந்த போது அவையில் அந்தணர்கள் வீற்றிருந்த பக்கத்திலிருந்து கணீரென்று எழுந்தது ஒரு கம்பீரமான குரல். துட்டத்துய்ம்மன் முதல் எல்லோரும் வியப்படைந்து அந்தணர்கள் வீற்றிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தனர். மாறு வேடத்திலிருந்த அர்ச்சுனன்தான் எழுந்திருந்து பேசினான். அவன் பேச்சு துட்டத்துய்ம்மனை நோக்கி எழுந்தது. ‘அரசர்களில் எல்லோருமே முயன்று பார்த்துத் தோல்வியடைந்து விட்டார்கள். அந்தணர்களாகிய எங்களிலிருந்து எவரேனும் முன்வந்து முயற்சியில் வெற்றி பெற்றால் நிபந்தனைப்படி திரெளபதியை மணம் செய்து கொடுப்பீர்களா?’ -கூட்டத்தில் ஏளனத்தைக் குறிக்கின்ற சிரிப்பொலி ‘கலகல'வென்று எழுந்தது.

‘அந்தணனுக்கு ஆசையைப் பார்! இத்தனை வீரதீரர்களான வேந்தர்களால் முடியாததை இந்த அந்தணனா செய்துவிடப் போகிறான்?’ -என்ற மாதிரிப்

அ.கு. -7