பக்கம்:மக்கள் கலாச்சாரத்தை மண்ணாக்கும் சக்திகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செக்ஸ் குற்றங்கள் , வக்கிரச் செயல்கள், வன்முறைப் போக்குகள் முதலியவை இதற்குச் சான்ருகின்றன.

மேற்கத்திய கலாசாரத்தினால் பாதிக்கப்படுவதற்கு நம்மை நாமே ஆளாக்கிக் கொண்டிருப்பது உண்மையிலேயே அனுதாபத்துக்கு உரிய விஷயம் தான். மேலைநாடுகளில் புத்தகப் பிரசுரம் குறிப்பிட்ட சில பெரும் முதலாளிகளால் நிர்வகிக்கப்படுகிறது, அரசு ஆதரவும் அவர்களுக்கு இருக்கிறது. அதே சமயம் சுயேச்சையான பிரசுர முயற்சி களும் சிறு பதிப்பகங்களும் செயல்பட முடியாமல் நொடித்துப் போய் மறைந்து விடுகின்றன. இதர தொழில் துறைகளில் உள்ள பெரிய ஏகபோக நிறுவனங்கள் போலவே புத்தகப் பிரசுர நிறுவனங்களும் லாப நோக்கத்துடனேயே இயங்குகின்றன. இதன் விளைவு என்ன? புத்தக வெளியீடு என்பதும், நாகரிகமான காலணிகள் அல்லது நவீன ஆடைகள் உற்பத்தி பண்ணும் தொழிலைப் போல, இன்னொரு தொழில் தான் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில், நல்ல கலாசாரப் பின்னணி உடைய அறிவார்ந்த வாசகருக்கு என்று தயாராகிற தரமான ஆழ்ந்த இலக்கியத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு மலிவு ரகமான குப்பைப் புத்தகங்களே அதிகம் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவது சகஜமாகி விட்டது.