பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6


நான் இப்போது கதை சொல்லுவது பூசணிக்காயைப் போல இருக்கும் பலூனைப் பற்றித்தான். முதலில் அது சின்னதாக இருக்கும். வாயில் வைத்து ஊதினால் பூசணிக்காயைப்போலப் பெரிதாக வரும்.

நடராஜன் என்று ஒரு பையன் இருந்தான், அவனுக்குப் பூசணிக்காய்ப் பலூன் என்றால் ரொம்பப் பிரியம். அதை வாங்கி மூச்சுப் பிடித்து ஊதுவான். அது கொஞ்சங்கொஞ்சமாகப் பெரிதாகி வரும். முதலில் டென்னிஸ் பந்துபோல் ஆகும். அதற்குமேலே ஊதினால் கால்பந்துபோலப் பெரிதாகும். இப்படி அது உப்பிப் பெரிதாக ஆகிறதைப் பார்த்துப் பார்த்து நடராஜனுக்கு ஒரே கொண்டாட்டமாக இருக்கும். அதை ஒரு நூலால் காற்றுப் போகாமல் கட்டிவிட்டு மேலே தூக்கி வீசுவான். அது காற்றிலே அங்கும் இங்கும் அவன் கைக்குச் சிக்காமல் ஓடும். நடராஜன் சிரித்துக்கொண்டே அதைப் பிடிப்பான். சில சமயம் காலால் மெதுவாக உதைப்பான். அது உருண்டு ஓடும். இப்படி அவன் விளையாடுவான்.

நடராஜனுக்கு மாமா ஒருவர் இருந்தார். ஒருநாள் அவர் பட்டணத்திற்கு வந்தார். வந்தபோது, “மாமா, மாமா , பூசணிக்காய்ப் பலூன் வேணும் - கடற்கரைக்குப் போய் வாங்கிவரலாம்” என்று அவன் கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டான்.

மாமா அப்படியே பச்சை நிறத்தில் ஒரு பலூன் வாங்கிக் கொடுத்தார். அதோடு அவருக்குச் சித்திரம் போடவும் தெரியும். சின்னப் பாப்பா சிரிப்பதைப் போலவும் சர்க்கஸ் கோமாளி வாயைப்போலவும் அவர் மையால் அந்த பலூனில் போட்டுக் கொடுத்தார்.

நடராஜனுக்கு ஒரே குதூகலம். அவன் அந்தப் பாப்பாவுக்குப் ‘பலூன் பாப்பா’ என்று பேர் வைத்தான்.

பலூன் பாப்பாவைக் கொஞ்சம் ஊதுவான். அது வாயைத் திறந்து சிரிப்பது போலத் தோன்றும். இன்னும் கொஞ்சம் காற்றை உள்ளே ஊதுவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மஞ்சள்_முட்டை.pdf/11&oldid=1090506" இலிருந்து மீள்விக்கப்பட்டது