பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

பலூன் பாப்பாவின் சிரிக்கிற வாய் இன்னும் கொஞ்சம் பெரிதாக வாய் பிளந்ததுபோலச் சிரிக்கும். பலூன் பாப்பாவுக்கு வயிறு கொஞ்சம் கொஞ்சமாகத் தொந்தி வர ஆரம்பிக்கும்.

அதைப் பார்த்து நடராஜன், “பலூன் பாப்பாவுக்குத் தொந்தி, பலூன் பாப்பாவுக்குத் தொந்தி!—பாருங்கோ! பாருங்கோ!” என்று கூத்தாடினான்.

பலூன் பாப்பாவுக்கு இன்னும் பெரிய தொந்தி வரவேண்டும் என்று நடராஜன் விரும்பினான். உடனே பலூனை வாயில் வைத்து ஊதத் தொடங்கினான்.

அப்பொழுது பலூன் பாப்பா அவனைப் பார்த்து, “ராஜா, இப்பொழுதே எனக்கு வயிறு வலிக்கிறது. காற்றை மேலும் ஊத வேண்டாம்” என்று கெஞ்சிக் கேட்டது.

“அப்படித்தான் ஊதுவேன். ஊதினால் என்னவாம் ?” என்று நடராஜன் கேட்டான். பலூன் பாப்பாவின் கெஞ்சுதலுக்குக் கொஞ்சங்கூட மனம் இளகாமல் அவன் அப்படிக் கேட்டான்.

“ராஜா, இன்னும் எனக்குத் தொந்தி பெரிதானால் என் வயிறு வெடித்துப்போகும். அப்படிச் செய்யாதே” என்று மறுபடியும் கெஞ்சியது.

“அதெல்லாம் முடியாது. நான் ஊதத்தான் ஊதுவேன்” என்று சொல்லிக்கொண்டே நடராஜன் ஊதத் தொடங்கினான்.

பாவம், சிரித்துக்கொண்டிருந்த பலூன் பாப்பா வயிறு உப்பி, ‘படார்’ என்று வெடித்துவிட்டது. பிறகு பார்த்தால் பலூன் ஒரேயடியாகச் சுருங்கிப் போயிற்று. பாப்பாவின் சிரித்த முகத்தையும் அதில் காண முடியவில்லை.

நடராஜனுக்கு ஒரே அழுகையாக வந்தது. “மாமா, மாமா இன்னொரு பலூன் வாங்கிக்கொடுங்கள்” என்று தேம்பிக்கொண்டே கத்தினான்.

ஆனால், மாமா புறப்பட்டுத் தம் ஊருக்குப் போய் விட்டார். தாயும் தகப்பனும் அவரை வழி அனுப்பு-