பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வதற்காகச் சென்றவர்கள் அப்படியே கோயிலுக்குப் போய்விட்டார்கள்.

அதனால் வீட்டில் தனியாக இருந்து நடராஜன் அழுதுகொண்டே இருந்தான். பலூன் பாப்பாவும் அவன் அழுவதைப் பார்த்து வருத்தப்பட்டது.

“ராஜா, அழாதேடா, கண்ணு. மாமா நாளைக்கு வருவார், அழாதே” என்று சொல்ல முயன்றது. ஆனால், இப்பொழுது அதன் வயிறும் உடம்பும் கிழிந்து போனதால் அதனால் பேசவே முடியவில்லை. எத்தனை உரக்கக் கத்தினாலும் அதன் குரல் வெளியே கேட்கவில்லை.

நடராஜன் அழுகை ஓயவே இல்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்துகொண்டிருந்தது. கன்னமெல்லாம் சிவந்து போயிற்று.

கோயிலுக்குப் போன பெற்றோர்கள் நல்ல வேளையாக வேறொரு பூசணிக்காய்ப் பலூன் வாங்கி வந்தார்கள். அதைக் கண்டபிறகுதான் நடராஜன் அழுகை நின்றது. “அப்பா, இதிலே சிரிக்கிற மாதிரி ஒரு பாப்பா போட்டுக் கொடுங்கள்” என்று அவன் தந்தையைப் பார்த்துக் கேட்டான்.

“எனக்கு உன் மாமாவைப் போலப் படம் வரைடத் தெரியாது. நாளைக்கு மாமா மறுபடியும் வருவார். அவரிடம் படம் போடச் சொல்” என்று அவர் கூறிவிட்டார்.

நடராஜன் இப்பொழுது மிகவும் கவனமாக இருந்தான். பலூனை அதிகமாக ஊதவில்லை. ‘மாமா வரட்டும், பலூன் பாப்பாவை அதில் போடச் சொல்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டு, அவன் மகிழ்ச்சியோடு மாமா வருகிற வழியையே காலை முதல் பார்த்துக் கொண்டிருந்தான். சாப்பிடக்கூட அவனுக்குத் தோன்றவில்லை.

மாமாவும் மாலையில் வந்தார். பலூன் பாப்பாவை அழகாக வரைந்து கொடுத்தார்.