பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அவன் இப்படிக் குறை சொல்லிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கேட்டு இருவருக்கும் அலுத்துப்போய்விட்டது அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்கவேண்டும் என்று தங்களுக்குள்ளே தீர்மானம் செய்துகொண்டார்கள்.

சில நாள்களுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு நல்ல சமயமும் கிடைத்தது. அவர்களுடைய பெற்றோர்கள் ஏதோ ஒரு திருமணத்திற்காக மற்றோர் ஊருக்குப் போக வேண்டியிருந்தது. மாலையிலே போய் அடுத்த நாள் காலையில்தான் திரும்புவார்கள். வீட்டில் கந்தசாமி, கண்ணம்மா, அசோக் மூவருமே இருப்பார்கள். பண்ணையில் வேலை செய்பவர் ஒருவர் வீட்டுத் திண்ணையிலே இரவிலே படுத்துக்கொள்ளுவார். வீட்டிற்குள்ளே நடப்பது அவருக்கு ஒன்றும் தெரியாது. அந்த இரவு தான் நல்ல சமயம் என்று கந்தசாமி திட்டமிட்டான். தாய்தந்தையர் திருமணத்திற்கு வண்டியிலே சென்ற பிறகு, “அசோக், உனக்குப் பேய் என்றால் பயமே இல்லையா?” என்று கேட்டான் கந்தசாமி.

“பேய் இருந்தால்தானே பயப்படுவதற்கு? இதெல்லாம் கிராமத்து மக்களின் மூடநம்பிக்கை” அசோக் குத்தலாகப் பேசினான்.

“எங்கள் வீட்டிற்குள் கிழக்குப் பார்த்ததுபோல் ஓர் அறை இருக்கிறது பார்த்தாயா?”

“ஆமாம், எப்பொழுதும் அதை ஏன் பூட்டியே வைத்திருக்கிறீர்கள் ? அதில் ஏதாவது தானியம் கிடக்கிறதா ?” - இது அசோக் கேட்ட கேள்வி.

“அந்த அறையிலே ஒரு பேய் வாசம் செய்கிறது. அதனால் நாங்கள் அந்த அறைக்குள் போவதேயில்லை” என்றான் கந்தசாமி.

அசோக் இதைக் கேட்டு, இகழ்ச்சியாக உரக்கச் சிரித்தான்.

“என்ன, சும்மா சிரிக்கிறாயே இன்றிரவு அந்த அறைக்குள் நீ தனியாகப் படுத்துத் தூங்குவாயா?” என்று கேட்டான் கந்தசாமி.