பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

21

தெரிந்துபோகும். பிறகு, நம்மேல் அவர்கள் கோபிப்பார்கள்” என்று கண்ணம்மா கவலையோடு எச்சரிக்கை செய்தாள்.

“அதெல்லாம் ஒன்றும் வராது. நாம்தாம் பக்கத்து அறையிலேயே இருக்கப் போகிறோமே!” என்று கந்தசாமி சொல்லிக் கண்ணம்மாவைச் சமாதானப்படுத்திவிட்டான்.

இரவு அசோக் அந்த அறையில் தனியாகப் படுத்துக் கொண்டான், அறையில் விளக்குக்கூட இல்லை. எல்லாம் ஒரே இருட்டாக இருந்தது. வெளியிலே ஒரு சிறு ஒலி கூடக் கேட்கவில்லை. இவையே அசோக்கின் நெஞ்சைக் கலக்கிற்று. ஆர்ப்பாட்டமாகப் பேசினாலும் அசோக் உண்மையிலேயே ஒரு கோழைதான், அதனால் அவனுக்கு இரவு 12 மணி ஆகியும் தூக்கமே வரவில்லை. அந்தச் சமயத்திலே சீழ்க்கை ஒலி மெதுவாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து கிளியின் குரல் ஏதோ பேய் பேசுவதைப் போலக் கிளம்பிற்று.

“யாரடா.... அவன்?, ... எங்கடா..... வந்தாய்....? பிடிடா அவனை....”

கிளியின் பேச்சைக் கேட்டு அசோக் நடுங்கிப் போய்விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் அறையை விட்டு அவன் வெளியே ஓடினான். பசுவிற்குப் போடுவதற்காக வைக்கோல் ஒரு பக்கத்திலே குவித்து வைக்கப்பட்டிருந்ததை அவன் முன்னமேயே பல முறை பார்த்திருக்கிறான். அங்கே போய் வைக்கோலைத் தன் மேலே போட்டு மூடிக்கொண்டு குறுகுறுவென்று பதுங்கிக்கொண்டான் அசோக். கந்தசாமியும் கண்ணம்மாவும் பின்னாலேயே ஓடிவந்து, வைக்கோலை அப்புறப்படுத்தத் தொடங்கினார்கள். அதனால் சரசர வென்று சத்தம் உண்டாகவே, “ஐயோ, பேய்! பேய்!” என்று அலறினான் அசோக்.

அண்ணனும் தங்கையும் உரக்கச் சிரித்தார்கள். அப்பொழுதுகூட அவனுடைய பயம் தீரவில்லை. அவன்