பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/29

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பிறகு யாராவது உள்ளே நுழைந்தால் தாய் “உப்வ் உப்வ்” என்று சத்தமிடும். அந்த சத்தத்தைக் கேட்ட பிறகும் பயப்படாமல் உள்ளே அடியெடுத்து வைத்தால் பயங்கரமாக அது குரைக்கும்.

குட்டி இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டே மௌனமாக இருக்கும்.

“என்னைப் போல நீ குரைக்க எப்பொழுதுதான் கற்றுக்கொள்ளப் போகிறாய்?” என்று தாய் சற்று விசனத்தோடு கேட்கும்.

“போம்மா; நீ சுத்தக் கர்நாடகம். உன்னைப்போல நான் சத்தம் போட மாட்டேன். நான் புதிய விதமாகப் பேசப்போகிறேன்” என்று அந்த நாய்க்குட்டி பதில் சொல்லிற்று.

“கர்நாடகம் என்றால் என்ன? எனக்குத் தெரியவில்லையே!” என்று தாய் கேட்டது.

“நீ பழைய மாதிரியே பேசுகிறாய். நான் புதிய விதமாகப் பேசப் போகிறேன். அப்பொழுதுதான் என்னை எல்லாரும் மதிப்பார்கள்” என்று நாய்க்குட்டி சொல்லிற்று.

இதைக் கேட்டு, தாய் விசனப்பட்டது. இருந்தாலும், அதை அதட்டவோ ஒதுக்கித்தள்ளவோ அதற்கு மனம் வரவில்லை. தானாகவே தன் குட்டி தெரிந்துகொள்ளட்டும் என்று பேசாமல் இருந்துவிட்டது.

இந்த நாய்க்குட்டிக்கு ஓர் எருமைக் கன்றும் வாத்துக் குஞ்சும் சிநேகம். அவற்றோடு அது குளக் கரையிலே அடிக்கடி விளையாடும்.

அதற்கு, எருமைக் கன்று கத்துவது நன்றாக இருக்கிறதென்று தோன்றியது. அதனால் எருமைக் கன்றைப் போலவே கத்தப் பழகிக்கொண்டது.

பிறகு, ஒரு பெரிய மாளிகைக்குள் நுழைந்து, வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. குட்டி அழகாக இருப்பதால் அதற்கு நல்ல உணவு கொடுத்து, வீட்டுக்காரன் மாளிகையின் முன்னாலேயே அதைக் கட்டிவைத்தான்.