பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அந்தச் சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட வீட்டுக்காரர், “நம் வீட்டில் வாத்து இல்லையே! பிறகு எங்கிருந்து இந்தச் சத்தம் வருகிறது? ஒருவேளை, பக்கத்து வீட்டுக்காரர் மாலை நேரத்தில் வாத்து வாங்கியிருக்கலாம்” என்று எண்ணிக்கொண்டு மறுபடியும் கண்ணை மூடித் தூங்கிவிட்டார். புதிதாக வந்த நாய்க்குட்டி இப்படிச் சத்தம் செய்யும் என்று அவருக்குத் தெரியாது.

அடுத்த நாள் காலையில் அனைவரும் எழுந்தபிறகு தான் அந்த வீட்டில் திருட்டுப் போயிருப்பது தெரியவந்தது.

எல்லாரும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார் நிலையத்திலிருந்து இரண்டு பேர் உடனே அங்கு வந்தார்கள், அவர்களைக் கண்டதும் நாய்க்குட்டி “குவாக் குவாக்” என்று சத்தம் செய்தது.

உடனே வீட்டின் சொந்தக்காரருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. ‘நாயைப் போலக் குரைக்காமல் இந்தக் குட்டி புது விதமாகக் கத்தியதால்தான் ஏமாந்து விட்டேன்’ என்பதை உணர்ந்தார். நாய்க்குட்டியின் மேல் கோபங்கொண்டு, நன்றாக அதை அடித்து வெளியே விரட்டிவிட்டார்.

நாய்க்குட்டி வலி தாங்காமல் ‘குவாக் குவாக்’ என்று கத்திக்கொண்டே தெருவழியாக ஓடிற்று. அது செய்யும் சத்தத்தைக் கேட்டுத் தெருவில் நடந்து கொண்டிருந்தவர்கள், அந்தக் குட்டிக்குப் பயித்தியம் பிடித்து விட்டதனால்தான் அப்படிச் சத்தம் செய்கிறது என்று நினைத்து, அதன்மேல் கல்லைவிட்டு எறிந்தார்கள்.

பாவம், அடிபட்டு மிகவும் வருந்திய நாய்க்குட்டி, தன் தாயிடமே வந்து அழுதது. “எனக்குப் புதுப் பேச்சு வேண்டாம். உன்னுடைய பேச்சையே கற்றுக் கொடு” என்று கெஞ்சிக் கேட்டது.

தாயும் மகிழ்ச்சியடைந்து சொல்லிக் கொடுத்தது. அதுமுதல் அந்த நாய்க்குட்டியை எல்லாரும் விரும்பினார்கள். அதைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டாதவர்களே இல்லை என்று கூறலாம்.