பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

அவற்றைப்பற்றியெல்லாம் பேசியதை அவர்கள் பல தடவை கேட்டிருக்கிறார்கள்.

“அதெப்படி செவ்வாய்க் கிரகம் ஆகும்?” என்று மணி சந்தேகத்தோடு கேட்டான்.

“ஆமாம், அது செவ்வாய்க் கிரகமேதான்; எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் சொல்லுவது நமக்குப் புரியவில்லை. அதிலிருந்தே அவர்கள் செவ்வாய்க் கிரகத்திலிருந்து பேசுகிறார்கள் என்று கண்டுகொள்ளலாம்” என்றான் சுப்பு.

மணிக்கும் அண்ணன் சொன்னது சரியென்று பட்டது. “ஆமாம், ஆமாம்! நீ சொன்னது சரி” என்றான் அவன். இருவருக்கும் ஒரே உற்சாகம் வந்துவிட்டது.

இருவரும் மாறிமாறி டெலிபோனைக் காதில் -வைத்துக் கேட்டார்கள்.

அந்தச் சமயத்தில் ‘படபட’ என்றும், ‘தடதட’ என் றும் பலவாறு சத்தம் கேட்டது. வெளியிலே ஆகாய விமானம் வானத்திலே பறந்து சென்றது. ஆனால், அதை அவர்கள் கவனிக்கவில்லை. செவ்வாய்க் கிரகமே அவர்கள் கவனத்தில் இருந்தது.

‘படபட’, ‘தடதட’ என்று சத்தம் கேட்கவே சுப்பு “ஓகோ, எனக்குத் தெரிந்துவிட்டது. செவ்வாய்க் கிரகத்திலிருந்து அவர்கள் நம் ஊர்மேல் படையெடுத்து வருகிறார்கள்” என்று அவன் புதிய உண்மையைக் கண்டு பிடித்தவன்போலக் கத்தினான்.

மணியும் அதை ஆமோதித்தான். “நம் ஊருக்கு முதலில் இதைத் தெரியப்படுத்த வேணும்” என்று இரண்டு பேரும் நினைத்தார்கள். ஆனால் எப்படித் தெரியப் படுத்துவது?

‘சுப்பு’ ஒரு தந்திரம் செய்தான், உடனே தன் நோட்டுப்புத்தகத்தில் இருந்த வெள்ளைக் காகிதங்களைப் பிரித்தெடுத்து, சிறுசிறு துண்டுகள் செய்து, அவற்றில் “செவ்வாய்ப் படையெடுப்பு வருகிறது, உஷார்!”