பக்கம்:மஞ்சள் முட்டை.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கள் சமைத்த உணவை உண்டு, கொடுத்த தண்ணீரையும் அருந்தினார்கள். “உயிர் போகிற நிலையில் தீண்டத்தகாதவர் என்று பார்த்தால் முடியுமா? அவர்களும் நல்லவர்களாகவே' இருக்கிறார்கள்” என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள்.

அடுத்த நாள் மாலைவரை அவர்கள் எல்லாரும் குகைகளிலேயே தஞ்சம் புகுந்திருந்தார்கள்.

சுப்புவுக்கும் மணிக்கும் இதற்குள் சளிக்காய்ச்சல் முற்றிலும் குணமாகிவிட்டது.

டெலிபோனில் சத்தமும் நின்றுவிட்டது. ஏனென்றால், மேலே ஆகாயவிமானம் பறந்தால்தானே “கர்முர்” என்று சத்தம் கேட்கும்! இதை அவர்கள் ஓடிப்போய் ஊராருக்குச் சொன்னார்கள். “நாம் எச்சரிக்கையாக இருப்பதைப் பார்த்து அந்தச் செவ்வாய்க் கிரகமக்கள் படையெடுத்து வராமல் நின்றுவிட்டார்கள்” என்று அவர்கள் சொன்னார்கள். எல்லாருக்கும் ஒரே மகிழ்ச்சி.

“சாமி, நம்ம ஊரில் என்ன தங்கமா விளையுது? கம்பையும் சோளத்தையும் நம்பி நாம் வாழ்கிறோம். நம்ம ஊர்மேல் யார் படையெடுப்பார்கள்?” என்று மலசர்களின் தலைவன் சொன்னான்.

“இல்லை, உங்களுக்கு ஒன்றும் தெரியாது. உங்களில் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. நாங்கள் அப்படி இல்லை. பத்திரிகைகளில் வருவதையெல்லாம் படித்திருக்கிறோம்” என்று அந்த ஊர் மக்கள் பலர் சொன்னார்கள்.

மலசருக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்கள் நினைத்தாலும், அவர்களுடைய அன்பைக் கண்டு அவர்களைப் பாராட்டினார்கள். அவர்களைத் தாழ்வாக பதிக்கும் எண்ணமும் மாறத் தொடங்கிற்று.

சுப்பு, மணி - இவர்களுடைய டெலிபோன் விளையாட்டு இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.