பக்கம்:மணமக்களுக்கு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



11

வைத்த முறை. எல்லோரும் நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

பதினாறு பேறு

இப்பொழுது திருமணத்தில் வாழ்த்துக் கூறுவது ஒரு சடங்காகப் போய்விட்டது. பழங்காலத்தில் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என்று வாழ்த்துவார்கள். அது பதினாறு பிள்ளைகளைப் பெறுவது என்பதல்ல. ஒருவனுடைய வாழ்வு பெருவாழ்வாக அமைய வேண்டுமானால், அவன் பதினாறு பேறுகளையும் பெற்றிருக்க வேண்டுமென்பது கருத்து. அப்பேறுகள்: மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ் என்பன.

யாரோ நல்லவர் ஒருவர் இப்பேறுகளை எண்ணாமல் பதினாறு பிள்ளைகளை எண்ணி, என் தாய் தந்தையர்களை வாழ்த்திவிட்டதனால், நாங்கள் பதினாறு பிள்ளைகள் பிறந்து விட்டோம். நான்தான் பதினாறாவது பிள்ளை. எனக்குத் தம்பியும் இல்லை-தங்கையும் இல்லை. இக் காலத்தில் இவ்வாழ்த்துதல் பொருந்துமா? பொருந்தாது.

தனம், தான்யம்

இரண்டாவதாக, இருபதாண்டுகளுக்கு முன்புவரை, மணமக்களை வாழ்த்தும்போது "தனம், தான்யம், வெகு புத்திரலாபம், தீர்க்காயுசு, சுபமஸ்து" என்று வாழ்த்தி வந்தார்கள். இன்று இப்படி வாழ்த்த முடியாது. வாழ்த்தக் கூடாது. ஏனெனில் இது சட்டத்திற்குப் புறம்பானதாகப் போய்விட்டது. தனம் - தங்கக்கட்டுப்பாடு; தான்யம் - தானியக்கட்டுப்பாடு; வெகுபுத்திர லாபம் - குடும்பக் கட்டுப்பாடு; ஆகவே இவ்வாறு வாழ்த்துவதும் முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/13&oldid=1415136" இலிருந்து மீள்விக்கப்பட்டது