பக்கம்:மணிவாசகர்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமானும் சென்றிருப்பார். தனி ஒரு ஆன்மா விடுதலை பெற்றிருக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகம் *திருவாசகம்’ என்ற ஒப்பற்ற நூலை இழந்திருக்குமே! வேற்று நாட்டிலிருந்து தம் சமயத்தை இவண் பரப்புதற்காக வந்த டாக்டர் ஜி. யூ. போப் போன்றவர்களும் என்பு கரைக்கும் பாடல்” என்று ஈடுபாட்டுடன் கூறும் ஒரு நூலை இவ் வுலகம் இழந்திருக்குமே! பல சமயங்களில் திருவருள் என்ன குறிப்புடன் எதனைச் செய்கிறது என்பதைச் சிற்றறிவு உடைய நாம் அறிதல் முடியாத காரியம். இறைவன் தன் கருத்தை நிறைவேற்ற ஒவ்வோர் உயிரையும் ஒவ்வொரு முறையில் பயன்படுத்திக் கொள்கிறான். அதனை ஏன் என்று கேட்கும் உரிமையோ அதிகாரமோ நம்மாட்டு இல்லை. இதனை நன்கு அறிந் திருந்தார் மணிவாசகப் பெருமான். ஆனால், திருவாசகத் தின் முற்பகுதியில் அதாவது சதகத்திலும், நீத்தல் விண்ணப் பத்திலும் இதன் எதிராக இறைவன் மறைந்து விட்டமைக் கும் தம்மை விட்டு விட்டு அடியார்களை மட்டும் அழைத்துச் சென்று விட்டமைக்கும் வருந்தி அழுவது அதிகமாக இருக்கும். அனுபவத்தை இழந்த அணிமையில் இவ்வாறு வருத்தம் உண்டாவது முறைதான். தம்மிடம் ஏதோ குறை இருக்கக் கண்டுதான் இறைவன். தம்மை ஒதுக்கிப் போய்விட்டான் என்று சதகத்திலும், விண்ணப்பத்திலும் பலமுறை கதறுகிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்லத் தம்மை இவண் இருத்தியதிலும் ஏதோ காரணம் இருத்தல் வேண்டும் என்பதை உணரு கிறார் போலும்! எனவே தம்மை அழைத்துக் கொள் என்பதற்கும் விட்டுப்போ என்பதற்கும் தமக்கு அதிகாரம் இல்லை என்பதையும், முழுவதும் அவனிடம் சரணடைந்து விட்ட பிறகு இருப்பதற்கும் போவதற்கும் தமக்கு அதிகாரம் இல்லை என்பதையும் பெருமான் உணர்ந்து பாடுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/251&oldid=852712" இலிருந்து மீள்விக்கப்பட்டது