பக்கம்:மணி பல்லவம் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கொள்வதற்கு அரிதாயிருக்கும் மிகப்பெரிய மர்மம் ஒன்றும் மணிபல்லவத்தில்தான் விளங்குகிறது. அந்த மெய் அவன் கண்களைத் திறக்கிறது. தன்னைப் பற்றிய பரம இரகசியத்தை அன்று அங்கே அவன் விளங்கிக் கொள்கிறான்.

இன்னும் இந்தக் கதையில் எழில் நிறைந்த பெண்கள் வருகிறார்கள். ஆனால், அவர்கள் அரசகுல நங்கையரில்லை. காதலும், வீரமும், சோகமும், இன்பமும், சூழ்ச்சியும், சோதனையும் வருகின்றன. ஆனால், அவை அரண்மனைகளையும் அரச மாளிகைச் சுற்றுப் புறங்களையும் மட்டும் சார்ந்து வரவில்லை. போரும், போட்டியும் வருகின்றன. ஆனால் அவை மணிமுடி தரித்த மன்னர்களுக்கிடையே மண்ணாசை கருதி மட்டும் வரவில்லை. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற மாபெருங் காவியங்கள் பிறக்கக் காரணமாயிருந்ததோர் இலக்கியகாலச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு அந்தப் பெருங்கதைகளில் கண்ட மிகப்பெரியதும், அளப்பரியதுமான பூம்புகார் நகரை உங்கள் கண் பார்வையிற் கொண்டு வந்து காட்ட முயல்கிறேன்.

அதோ!

சிறப்புமிக்க சித்திரை மாதம். காவிரிப் பூம்பட்டினம் இந்திரவிழாக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. எங்கும் இனிய ஒலிகள், எங்கும் அலங்காரப் பேரொளி. எங்கும் மணமலர், அகிற்புகை வாசனை, எங்கும் மக்கள் வெள்ளம். காவிரி கடலோடு கலக்கும் சங்க முகத்திலும் விழாக் கூட்டம். எங்கு நோக்கினும் யானைகளிலும், குதிரைகளிலும், தேரிலும் சித்திர ஊர்திகளிலும் விரையும் மக்கள். கடல் முடிந்து கரை தொடங்குமிடத்தில் மற்றொரு கடல் தொடங்கி ஆரவாரம் செய்வதுபோல் அலை அலையாய் மக்கள் குழுமியிருக்கின்றனர். மஞ்சளும் சிவப்புமாய் வண்ண வண்ண நிறம் காட்டும் மாலை வானத்தில் கோல எழில் குலவும் வேளை அடங்கியபொழுது, அமைந்த நேரம், அந்த நேரத்தில் அந்த விழாக்கோலங்கொண்ட கடற்கரையில் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் நம்முடைய கதாநாயகனைச் சந்திக்கிறோம். கதை தொடங்குகிறது.

கதை மாளிகைக்குள்ளே நுழையலாம், வாருங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/10&oldid=1141566" இலிருந்து மீள்விக்கப்பட்டது