பக்கம்:மணி பல்லவம் 1.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

101

குரலுக்காகவும் அவன் நிற்கவில்லை. மிகவும் வேகமாக நடந்தான்.

மிகப் பெரிய அந்த மாளிகையிலிருந்து விலகி வீதியில் வெகு தொலைவு வந்த பின்னும் தன்னை யாரோ கூர்ந்து நோக்கியவாறே பின் தொடர்வதுபோல் இளங்குமரனுக்கு ஒரு பிரமை உண்டாயிற்று. பின்புறம் யாரோ வந்து கொண்டிருப்பதுபோல் பிடரியிலும் ஓருணர்வு குறு குறுத்தது. வீதி திரும்பியதும் திருப்பத்தில் நின்று கொண்டு பின் பக்கம் பார்வையைச் செலுத்தினான்!

அவன் சந்தேகப்பட்டது சரியாயிருந்தது, கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு விகாரமான முகத்தையுடைய ஒற்றைக் கண்ணன் ஒருவன் தயங்கித் தயங்கிப் பின்னால் வந்து கொண்டிருந்தான். அந்த ஒற்றைக் கண்ணனுக்குப் பின்னால் தோழிப் பெண் வசந்தமாலையும் பதுங்கினாற் போல மெல்ல வந்து கொண்டிருந்தாள். அவர்கள் தன்னைத் தொடருகிறார்களா அல்லது தற்செயலாக வருகிறார்களா என்பதனைத் தெரிந்து கொள்வதற்காக நின்றும், வழி மாறிச் சென்றும் சோதனை செய்தான். சந்தேகமில்லாத வகையில் அவர்கள் அவனையே தொடர்வது தெரிந்தது. அவன் நின்றால் அவர்களும் நின்றார்கள்.

‘என்ன வந்தாலும் வரட்டும்! அடுத்து வருகிற வீதித் திருப்பத்தில் மறைந்து நின்று இந்த ஒற்றைக்கண் மனிதனை வழி மடக்கி விசாரிக்க வேண்டியதுதான்’ என்றெண்ணிக் கொண்டான் இளங்குமரன்.

அவ்வாறே செய்வதற்கும் சித்தமானான்.

ஆனால் அவன் நினைத்தபடி செய்ய முடியவில்லை! ஏனென்றால் அந்த வீதி திரும்புமிடத்தில், ஏற்கெனவே நாளங்காடியிலிருந்து தன்னைத் தேடி வந்து கொண்டிருந்த கதக்கண்ணனையும், பிற நண்பர்களையும் அவன் சந்திக்கும்படி நேர்ந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/102&oldid=1141772" இலிருந்து மீள்விக்கப்பட்டது