பக்கம்:மணி பல்லவம் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


13. இது என்ன அந்தரங்கம்?

லியிருள் அகலக் காவிரியணைந்த மாபெரும் நகர்க்குப் பொலிகதிர் பரப்பிப் பகல் செய்த கதிரவன் மெல்ல மெல்ல மெல்ல மேற்கே மறைந்து கொண்டிருந்தான். விரிநீல மணித்திரையில் விட்டெறிந்த ஒளி மலர்களென விண்மீன்கள், மின்னத் தொடங்கியிருந்தன. திசைமுகங்கள் பசந்து மங்கிய நிறம் பூசிக் கொள்ளலாயின. அகன்ற வான்வெளியில் சந்திரன் அணிநிலா விரித்தான். பொழுதும் பருவமும், காலம் கற்பிக்கும், இயற்கை யெழில்களும் எல்லா இடத்திலும் அழகு தருவனவாக இருப்பினும் பூம்புகார் நகரைச் சார்ந்து வரும்போது பன்மடங்கு பேரழகு தருவனவாக இருந்தன. இயற்கை நிகழ்ச்சிகள் தாம் நிகழும் இடத்தைப் பொறுத்தே அழகு பெறுகின்றன. கதிரவன் உதயம் கடற்கரையிற் பேரழகு, தென்றல் சோலைகளின் நடுவே வீசும்போது பேரழகு, அருவி மலை முகடுகளில் இலங்கும்போது பேரழகு- என்று சார்ந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் அழகு பேரழகாவது போல் தன்னைச் சார்ந்து நிகழும் யாவற்றையும் பேரழகாக்கிக் காட்டும் பெரும் பேரழகை முதலீடாகக் கொண்டது பூம்புகார் நகரம்.

வளம் மலிந்த அந்நகரத்தில் காலையும் அழகு, மாலையும் அழகு, நண்பகலும் அழகு, இரவும் அழகுதான், நேரத்துக்கு நேரம் விதம் விதமாக அலங்கரித்துக் கொண்டு நிற்கும் வனப்பும், வசதிகளும் உள்ள அழகிபோல் ஒவ்வொரு பொழுதும், பருவமும், ஒவ்வோர் அழகு தோன்றித் துலங்கும் அரச கம்பீர வாழ்வுள்ள நகரமாயிருந்தது அது. நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் அழகைச் சுமந்து கொண்டு வந்த அந்திமாலை நேரம் பட்டினப் பாக்கத்தில் அழகுக்கே அழகு செய்வது போலப் பரவிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/103&oldid=1149481" இலிருந்து மீள்விக்கப்பட்டது