பக்கம்:மணி பல்லவம் 1.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

103

மாளிகையின் முன் புறங்களில் பசுமையழகுக்காகப் படர விட்டிருந்த முல்லையும், மல்லிகையும் அரும்பு நெகிழ்ந்து மணம் பரப்ப, அந்த மணம் அந்த நேரத்தில் வீசிக் கொண்டிருந்த மெல்லிளந் தென்றலிற் கலந்து பரவியது. அந்தி மாலைக்காக இல்லங்களின் முன்பக்கத்து மாடப் பிறைகளில் மங்கல விளக்கேற்றி வைக்கும் பெண்களின் வளையொலியும், சிரிப்பொலியும், கிண்கிணிச் சிலம் பொலியும் வீதியெல்லாம் நிறைந்து ஒலித்தன. முகமே ஒரு மங்கல விளக்காய் அதில் முத்துநகை சுடர்விரிக்க முறுவல் நிகழும்போது விழிகளில் நளினம் ஒளிபரப்பத் தீபம் ஏற்றி வைக்கும் பெண்களே தீபங்களைப்போல் வீதிகளில் தோன்றினர். வீதிகளிலிருந்த யாழிசையும், குழலிசையும், மத்தளம்— முரசங்களின் ஒலியும், பல்வேறு கோவில்களின் மணியோசையும், மறை முழக்கமும், பண்ணிசை ததும்பும் பாடல்களும் கலந்தெழுந்து ஒலிக்காவியம் படைத்தன.

இந்த அற்புதமான நேரத்தில் சுரமஞ்சரியும் அவளுடைய சகோதரி வானவல்லியும், வேறு பணிப்பெண்களும், தங்கள் பெருமாளிகையின் ஏழாவது மாடத்துக்கு மேலே நிலா முற்றத்தில் அமர்ந்திருந்தார்கள். மிகவும் உயரமான அந்த நிலா முற்றத்திலிருந்து நான்கு காவதச் சுற்றளவுக்குப்[1] பரந்திருந்த பூம்புகார் நகரத்தின் எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிந்தன. ஒளிவெள்ளம் பாய்ச்சினாற் போல் இந்திர விழாவுக்கான தீபாலங்காரங்கள் நகரத்தைச் சுடர்மயமாக்கியிருந்தன. நாளங்காடிக்கும் அப்பால் கிழக்கே மருவூர்ப் பாக்கம் முடிகிற இடத்தில் நீல நெடுங்கடல் அலை பாய்ந்து கொண்டிருந்தது. துறைமுகத்திலும், காவிரியின் சங்கம வாயிலிலும் பெரிய கப்பல்களில் வைத்திருந்த விளக்குகள் பல


  1. பூம்புகார் நகரின் சுற்றுப்பரப்பு நான்கு காவதம் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சுமார் முப்பது சதுரமைல் பரப்பு என்று சதாசிவ பண்டாரத்தார் ஆராய்ந்து கூறியுள்ளார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/104&oldid=1141774" இலிருந்து மீள்விக்கப்பட்டது