பக்கம்:மணி பல்லவம் 1.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

மணிபல்லவம்

“நானும் துணைக்கு வருகிறேன், அப்பா! புறப்படுங்கள். முனிவரைத் தேடிப் பார்க்கலாம்” என்று உடன் புறப்படத் தொடங்கிய முல்லையை வரவேண்டாமென மறுத்துவிட்டார் அவர்.

“நீ வேண்டாம் முல்லை! நானே மறுபடியும் போய் நன்றாகத் தேடிவிட்டு வருகிறேன். நம் வீட்டுப் பின்புறம் ஆரம்பமாகிற நெடுமரச் சோலை சம்பாபதி வனம், சக்கரவாளக் கோட்டம் ஆகிய இடங்கள் வரை நெடுந் தொலைவு இடைவெளியின்றிப் பரந்து கிடக்கிறதே; இதில் எங்கேயென்று குறிப்பிட்டு அவரைத் தேடுவது?” என்று கூறிக்கொண்டே திண்ணையில் அடுக்கியிருந்த வேல்களில் ஒன்றை உருவினார் வளநாடுடையார். அந்த வேலை ஊன்றுந் துணையாகக் கொண்டு வீட்டின் பின் பக்கத்துத் தோட்ட வழியாக அவர் புறப்பட்டபோது பிற்பகல் நேரம் முதிரத் தொடங்கியிருந்தது.

முடிந்தவரை எல்லா இடங்களிலும் தேடிவிட்டு இறுதியாகச் சக்கரவாளக் கோட்டத்திலுள்ள அருட்செல்வ முனிவரின் தவச்சாலைக்கும் போய்ப் பார்த்துவிடலாம் என்பது கிழவர் வீரசோழிய வளநாடுடையாரின் எண்ணமாக இருந்தது. இளமையிலும், நடுத்தர வயதிலும் காவல் வீரனாகவும்; காவற்படைத் தலைவனாகவும் அந்தப் பெருவனத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வேலும் கையுமாகச் சுற்றிய நினைவு வந்தது அவருக்கு. அப்போது சுற்றியதற்கும், இப்போது சுற்றுவதற்கும் இடையில்தான் எத்துணை வேறுபாடுகள்! வீரமும், மிடுக்கும், வலிமையும் கொண்டு சுற்றிய அந்தக் காலம் எங்கே, தளர்ந்த உடலோடு வேலை ஊன்றிக் கொண்டு நடக்கும் இந்தக் காலம் எங்கே? முல்லையின் தாயார் காலமாகும் வரையில் அவருக்கு மனத்தளர்ச்சி இருந்ததில்லை. முல்லையின் குழந்தைப் பருவத்தில் ‘அவள்’ காலமான போது அவருக்கு மனமும், தளர்ந்தது. அந்தச் சமயத்தில் கட்டிளம் காளையாக வளர்ந்திருந்த புதல்வன் கதக்கண்ணனைக் காவற் படைவீரனாகச் சோழ சைன்யத்தில் சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/113&oldid=1141783" இலிருந்து மீள்விக்கப்பட்டது