பக்கம்:மணி பல்லவம் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

மணிபல்லவம்

நிற்கும் அந்தப் பூதச் சிலையின் இரு கால்களுக்கும் இடையேதான் கோட்டத்துக்குள் போவதற்கான சாலை அமைந்திருந்தது. தைரியமில்லாத மனங் கொண்டவர்கள் பூதம் நின்ற வாயிலில் நடந்து உள்ளே போகும்போது கூட அந்தச் சிலை அப்படியே கைகளை நீட்டித் தங்களை அமுக்கிவிடுமோ என்று வீணாகப் பிரமை கொள்ள நேரிடும். அவ்வளவு பிரம்மாண்டமான அமைப்புடையது அந்த வாயில். அதைப் பார்த்துக் கொண்டு நின்றால் கால்களிடையே வழி கொடுத்துக் கொண்டே பூதம் நகர்ந்து வருவது போலவே தொலைவில் தோன்றும். வீரசோழிய வளநாடுடையார் பூதம் நின்ற வாயிலின் வழியே சக்கரவாளக் கோட்டத்துக்குள் நுழைந்தார். அந்த மாலை நேரத்தில் அருட்செல்வ முனிவரின் தவச்சாலையும் அதைச் சூழ்ந்திருந்த மலர் வனமும், ஆளரவமற்ற தனிமை யில் மூழ்கித் தோற்றமளித்தன. ‘அருட்செல்வ முனிவரே’ என்று இரைந்து கூவியழைத்தவாறே தவச்சாலையில் ஒவ்வொரு பகுதியிலும் சுற்றிச்சுற்றி வந்தார் வளநாடுடையார். அவர் உரத்த குரலில் கூப்பிட்ட முனிவரின் பெயர் தான் அந்த வனத்தின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் திரும்பத் திரும்ப எதிரொலித்ததே தவிர, வேறு பதில் இல்லை. தவச்சாலையின் ஒரு பகுதியில் சுவடிகளை விரித்து வைத்து அருகில் தீபமும் ஏற்றி வைக்கப்பட்டிருந்ததால் மாலைப்போது நெருங்குகிற அந்த வேளையில் யாரோ அங்கு வந்திருக்கிறார்களென்பதை வளநாடுடையாரால் புரிந்து கொள்ள முடிந்தது, ‘சுவடிகள் தாமாக விரித்துக் கொண்டு சிடக்கப் போவதில்லை! தீபமும் தானாக ஏற்றிக் கொண்டு ஒளி தரப் போவதில்லை! யாரோ இப்போது இங்கே இருக்கிறார்கள்! ஆனால் என் முன்னால் வரத் தயங்குகிறார்கள்’ என்று சந்தேகங் கொண்டார் வளநாடுடையார். ‘சுவடிகளைப் படிக்க ஏற்ற முறையில் விரித்துத் தீபமும் ஏற்றி வைத்தவர், தாம் அங்கே வந்து நுழைவதைப் பார்த்துவிட்டு வேண்டுமென்றே தமக்காகவே மறைந்திருக்கலாமோ?’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/115&oldid=1141785" இலிருந்து மீள்விக்கப்பட்டது