பக்கம்:மணி பல்லவம் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. இந்திர விழா


பூம்புகார் நகரம் புதுவிழாக்கோலம் பூண்டு எழிலுடன் விளங்கியது. சித்திரை மாதத்தில் சிறப்பு வாய்ந்த சித்திரை நாள். வானத்தின் கீழ் மூலையில் வெண்மதி முழுநிலா விரித்துக்து கொண்டிருந்தது. ‘இந்திர விழாத் தொடங்குகிறது’ என்று வச்சிரக் கோட்டத்து முரசம் ஒலி பரப்பியபோதே அந்தப் பேரூர், விழாவுக்கான புதுமையழகுகளைப் புனைந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விழாவுக்கான புத்துணர்வும் புது மகிழ்வும் பெற்றுவிட்டது.

அடடா! அதோ, காவிரி கடலோடு கலக்கும் காவிரி வாயிற்சங்கமத் துறையில்தான் எவ்வளவு பெருங்கூட்டம்! கடலுக்கு அது கரை. ஆனால் அந்தக் கரைக்குக் கரையே இல்லாததுபோல் மக்கள் திரண்டிருந்தனர். எத்தனை வித ஒலிகள்! எத்தனை வித ஒளிகள்! எத்தனை வகை மணங்கள்! ஆடவரும் பெண்டிரும், இளைஞரும், முதியவரும், சிறுவரும், சிறுமியருமாக, அழகாகவும் நன்றாகவும் அணிந்தும், புனைந்தும், உடுத்தும் வந்திருந்தனர். நோக்குமிடம் எங்கும் நிருத்த கீத வாத்தியங்களின் இனிமை திகழ்ந்தது. இந்திர விழாவுக்காக எத்தனை விதமான கடைகள் காவிரிப்பூம்பட்டினத்தில் உண்டோ, அவ்வளவும் கடற்கரைக்கு வந்திருந்தன. இன்ன இன்ன கடையில் விற்கப்படும் பொருள்கள் இவையிவை என்பதை அறிவிக்க ஏற்றிய பல நிறக் கொடிகள் வீசிப் பறந்து கொண்டிருந்தன. பூவும், சந்தனமும் கூவிக் கூவி விற்கும் மணம் நிறைந்த பகுதி, பொன்னும் மணியும் முத்தும், பவழமும் மின்னும் ஒளி மிகுந்த கடைகள், பிட்டு விற்கும் காழியர்களின் உணவுக்கடைகள், பட்டுந் துகிலும் பகர்ந்து விற்கும் கடைகள். வெற்றிலை விற்கும் பாசவர்களின் கடைகள், கற்பூரம் முதலிய ஐந்து வாசனைப் பொருள்களை விற்கும் வாசவர்கடைகள்— எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/12&oldid=1142778" இலிருந்து மீள்விக்கப்பட்டது