பக்கம்:மணி பல்லவம் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

மணிபல்லவம்

கொண்டிருக்கும் தன்மை இளங்குமரனுக்கு உண்டு என்பது கதக் கண்ணனுக்குத் தெரியும். எந்நேரமும் கண்களிலும், பார்வையிலும், இதழ்களிலும் நகை நயம் விளங்க மலர்ந்து தோன்றும் இளங்குமரன் முகத்தில் இப்போது பசி வாட்டமும், சோர்வும் தெரிவதையும் கதக்கண்ணன் கண்டான். சில சமயங்களில் தன்னுள்ளே ஓடும் நினைவுப் புயலின் வேகத்தை வெளியே தெரியவிடாமல் மறைக்கும் சாதனமாக இந்தச் சிரிப்பையும், கலகலப்பான பேச்சையும் பயன்படுத்தும் வழக்கமும் இளங்குமரனுக்கு உண்டு என்பதையும் கதக்கண்ணன் அறிவான்.

“என்னவோ வேண்டுகோள் விடுக்கப்போவதாகச் சிறிது நேரத்துக்கு முன் கூறினாயே, கதக்கண்ணா!”

தன்னுடைய நினைவுகளிலிருந்தும், வேறு கவனத்திலிருந்தும் விடுபட்டு வந்தவனாக உடன் வந்த கதக்கண்ணன் பக்கமாகத் திரும்பி இந்தக் கேள்வியைக் கேட்டான் இளங்குமரன். இதற்கு உடனே பதில் கூறாமலே தன்னுடன் வந்த மற்ற நண்பர்களின் முகங்களைப் பார்த்தான் கதக்கண்ணன். அப்படிப் பார்த்தவுடனே நண்பர்களில் சிலர் கதக்கண்ணனைச் சிறிது தொலைவு விலக்கி அழைத்துக் கொண்டு போனார்கள். பின்பு திரும்பி வந்து மீண்டும் எல்லாருடனும் கலந்து கொண்டார்கள். நண்பர்களின் அந்தச் செயல் இளங்குமரனுக்குப் புதுமையாகவும் வியப்பளிப்பதாகவும் இருந்தது. “இளங்குமரா! நம் ஆசிரியர்பிரானிடம் இன்று காலையில் நண்பர்கள் உன்னைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர் உன்னை இன்று பிற்பகலுக்குள் சந்திக்க விரும்புகிறாராம்.”

“யார்? நீலநாக மறவரா?”

“ஆம்! இப்போது நாம் நீலநாக மறவருடைய படைக்கலச்சாலைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறோம்.”

“நீலநாக மறவருடைய படைக்கலச்சாலைக்குப் போவதற்கும், நீ இப்போது என்னிடம் கூறுவதற்கிருந்த வேண்டுகோளுக்கும் என்ன தொடர்பு!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/121&oldid=1141791" இலிருந்து மீள்விக்கப்பட்டது