பக்கம்:மணி பல்லவம் 1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

மணிபல்லவம்

தெரிந்ததனால் தந்தை ஊன்றுகோலால் இளங்குமரனின் ஓவியத்தைச் சுட்டிக் காட்டி ஏதோ செய்யச் சொல்லித் தூண்டுவதாகவும் அப்படி அவர் எதைச் செய்யச் சொல்லுகிறாரோ அதைச் செய்வதற்கு ஓவியன் அஞ்சித் தயங்குவதாகவும் புரிந்து கொள்ள முடிந்தது. வாயிலோரத்துப்படி விளிம்பில் வலது காற் பெருவிரலை அழுத்தி ஊன்றி அதன் பலத்தில் நின்று கொண்டு தலையை நீட்டிப் பார்ப்பது சிறிது கால் இடறினாலும் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை அவள் உணர்ந்திருந்தாள். அப்போது அங்கு வந்து நின்று, தான் மறைந்து கவனித்துக் கொண்டிருப்பது — தந்தையாருக்குத் தெரிந்தால் அதன் விளைவு எவ்வளவு விரும்பத் தகாததாக இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும்.

காற்பெருவிரல் வலிக்காமல் இருப்பதற்காகத் தலையைப் பின்னுக்குத் திருப்பி உட்புறம் எட்டிப் பார்ப்பதை நிறுத்திவிட்டு வாயிலுக்கு இப்பால் விலகி நன்றாக நின்று கொண்டாள் சுரமஞ்சரி, உட்பக்கம் நிகழ்வதைக் காணாமல் இப்படிச் சிறிது நேரம் விலகி நின்று விட்டுப் பின்பு மறுபடியும் அவள் உட்பக்கம் பார்த்த போது ஓவியனின் முகம் முன்னைக் காட்டிலும் பயந்து வெளிறிப் போயிருந்ததைக் கண்டாள். அவனுடைய முகம் அவ்வாறு பயந்து வெளிறிப் போவதற்குக் காரணமாக உட்பக்கத்தில் தான் பார்க்காதபோது என்ன நடந்திருக்கக் கூடும் என்பதைச் சுரமஞ்சரியால் அப்போதிருந்த குழப்பமான மனநிலையில் அநுமானம் செய்ய முடியவில்லை ஆனால்; ‘ஏதோ நடந்திருக்கிறது— நடந்திருக்க வேண்டும்’ என்று தேற்றமாகத் தெரிந்தது. ஒன்றும் விளங்காமல் மேலும் குழம்பினாள் சுரமஞ்சரி.

இதற்குள் சித்திரச்சாலைக்குள் நிற்கும் தந்தையும், ஓவியனும் அங்கிருந்து வெளியே புறப்படுவதற்குச் சித்தமாகி விட்டாற் போல் தெரிந்தது. ‘இனிமேல் தான் அங்கே படியோரமாக நின்று கொண்டிருப்பது கூடாது’ என்று முடிவு செய்து கொண்டவளாக அடிமேல் அடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/125&oldid=1141797" இலிருந்து மீள்விக்கப்பட்டது