பக்கம்:மணி பல்லவம் 1.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

125

வைத்து மெல்ல நடந்து தனது அலங்கார மண்டபத்தில் உடை மாற்றிக் கொள்வதற்கென அமைந்திருந்த தனிமையான பகுதிக்குள் புகுந்தாள் சுரமஞ்சரி. அங்கே புகுந்து மறைந்துகொள்வதனால் அப்போது அவளுக்கு இரண்டு விதமான நன்மைகள் இருந்தன. முதல் நன்மை தந்தையார் திரும்பிச் செல்லும்போது அந்தப் பகுதிக்கு வரமாட்டார். இரண்டாவது நன்மை அப்படியே நேரே போக வேண்டிய அவர் அந்தப் பகுதிக்கு வந்துவிட்டாலும் அவள் தனிமையாக அலங்காரம் செய்து கொள்வதற்குரிய பகுதியில் அவள் இருப்பதைப் பார்த்து, இப்போது ‘நீ இங்கே ஏன் வந்தாய்’ என்றோ வேறுவிதமாகவோ கேட்டு அவர் அவளைச் சினந்து கொள்ள முடியாது. இவ்வாறு அந்த அணியறைக்குள் புகுவதிலுள்ள இரு நன்மைகளையும் நினைத்தவாறே புகுந்த சுரமஞ்சரிக்கு அங்கே இன்னும் ஒரு பேராச்சரியம் காத்திருந்தது.

அறைக்குள் தோழிப்பெண் வசந்தமாலை ஓசைப்படாமல் திரும்பி வந்து குத்துக்கல்போல் சிலையாக உட்கார்ந்து கொண்டிருந்தாள். அப்போது சுரமஞ்சரியைக் கண்டதில் வசந்தமாலைக்கு வியப்பு அதிகமா! வசந்தமாலையைக் கண்டதில் சுரமஞ்சரிக்கு வியப்பு அதிகமா! என்று ஒப்பிட்டுச் சொல்ல முடியாமல் வியப்புக்களே எதிரெதிரில் சந்தித்துக் கொண்டதுபோல் அமைந்தது அந்தச் சந்திப்பு. தன் வாயிதழ்களின் மேல் ஆள்காட்டி விரலை வைத்துப் ‘பேசாமலிரு’ என்னும் பொருள் தோன்ற வசந்த மாலை சைகை செய்த அதே சமயத்தில் அதே போன்றதொரு சைகையைச் சுரமஞ்சரியும் வசந்தமாலைக்குக் காட்டிக் கொண்டே அருகில் வந்தாள்.

சித்திரச்சாலையிலிருந்து வெளியேறி தந்தையும் ஓவியனும் நடந்து செல்லும் காலடி ஓசை அறைக்குள் அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. அந்தக் காலடியோசை வெளியே நடந்து சென்று ஒலி தேய்ந்து மங்கியது. “நீ எப்போதடி இங்கு வந்தாய்?” என்று வசந்தமாலையைக் கேட்டாள் சுரமஞ்சரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/126&oldid=1141799" இலிருந்து மீள்விக்கப்பட்டது