பக்கம்:மணி பல்லவம் 1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

மணிபல்லவம்

உள்ளே சென்றாரா? அல்லது உன்னைப் போலவே அவரும் வெளியில் தங்கி விட்டாரா?”

“அதுதானம்மா எனக்கும் தெரியவில்லை! அவர்கள் படைக்கலச் சாலைக்குள் நுழைவதை நகை வேழம்பரும் கவனித்தார். அவர் கவனிப்பதை நானும் பார்த்தேன். ஒரு விநாடி எங்கோ கவனக்குறைவாகப் பராக்குப் பார்த்து விட்டு மறுபடியும் திரும்பி நான் பார்த்தபோது நகை வேழம்பரை அவர் முன்பு நின்று கொண்டிருந்த இடத்தில் காணவில்லை. அதற்குள் எப்படியோ மாயமாக மறைந்து போய் விட்டார். அந்த ஒற்றைக்கண் மனிதர், ஒரு கணப்போதில் அவர் எங்கே மறைந்தாரென்பது எனக்குப் பெரிதும் ஆச்சரியமாயிருக்கிறது அம்மா!”

“ஆச்சரியத்துக்குரியது அது ஒன்று மட்டுமில்லை வசந்தமாலை! எத்தனையோ பேராச்சரிய நிகழ்ச்சிகள் இன்று இந்த மாளிகையில் சர்வ சாதாரணமாக நடக்கத் தொடங்கியிருக்கின்றன. மாலையில் தோட்டத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோது தந்தையார் பின்புறத்து மறைவிலிருந்து திடும் பிரவேசம் செய்து பட்டிக்காட்டான் யானை பார்ப்பது போல் அந்த இளைஞரை அநாகரிகமாக உற்றுப் பார்த்தாரே, அது அவருக்கு எவ்வளவு அவமானமாகத் தோன்றியிருக்கும் தெரியுமா? அதுதான் போகட்டும். ஏதோ கொலைக்குற்றம் செய்துவிட்டுப் போகிறவனைப் பின் தொடர்கிறாற்போல் நகைவேழம்பரை எதற்காக அந்த இளைஞரைப் பின்தொடர்ந்து போகச் செய்ய வேண்டும்? நான் உள்ளே இருக்கும்போதே என்னிடம் சொல்லி அனுமதி கேட்காமல் எனது சித்திரச் சாலைக்குள் நுழையத் தயங்குகிற தந்தையார் இன்று நான் இல்லாதபோதே என் சித்திரச்சாலைக்குள் நுழைந்திருக்கிறார். மாலையில் தனக்குச் சேர வேண்டிய பொற் கழஞ்சுகளை வாங்கிக் கொண்டவுடனே. அந்த ஓவியன் இங்கிருந்து வெளியேறிப் போய்விட்டானென்று நான் நினைத்திருந்தேன். இப்போது சித்திரச்சாலைக்குள் தந்தையாரோடு அவன் எப்படி வந்தானென்று தெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/129&oldid=1141802" இலிருந்து மீள்விக்கப்பட்டது