பக்கம்:மணி பல்லவம் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மணிபல்லவம்

நிறைந்து கொடுப்போர் குரலும், கொள்வோர் குரலுமாகப் பேராரவாரம் மிகுந்து கடற்கரை கடைக்கரையாகவே. மாறியிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க பட்டினப்பாக்கத்து மக்களும், மருவூர்ப் பாக்கத்து மக்களும் கழிக்கரைகளில் வசித்து வந்த யவனர்களும், எல்லோரும் கடற்கரையிலே கூடிவிட்டதனால் நகரமே வறுமையடைந்து விட்டாற் போல் வெறுமை பெற்றிருந்தது. நாளங்காடித் தெருவிலுள்ள பூத சதுக்கத்துக் காவற்பீடிகையில் மட்டும் பொங்கலிடுவோர் கூட்டம் ஓரளவு கூடியிருந்தது. அது தவிர, மற்றெல்லாக் கூட்டமும் கடற்கரையில்தான்!

அவ்வழகிய கடற்கரையின் ஒரு கோடியில் மற்போர் நடந்து கொண்டிருந்த இடத்தில் பரபரப்பு அதிகமாயிருந்தது. கூத்து, இசை, சமயவாதம் முதலியனவெல்லாம் நிகழ்ந்து கொண்டிருந்த அரங்கங்களை விட மற்போர் அரங்கத்தில், ஆர்வம் காரணமாக ஆண்களும் பெண்களுமாக இளவயதினர் மிகுந்து கூடியிருந்தனர். முழுமதியின் ஒளி பரவும் வெண் மணற்பரப்பில் பலவகைக் கோலங்களைப் பாங்குறப் புனைந்து நின்றிருந்த பட்டினப்பாக்கத்துச் செல்வ நங்கையர் கந்தருவருலகத்து அரம்பையர் போல் காட்சியளித்தனர். எட்டி, காவிதி போன்ற பெரும் பட்டங்கள் பெற்ற மிக்க செல்வக் குடும்பத்து இளநங்கையர் சிலர் பல்லக்குகளில் அமர்ந்தவாறே திரையை விலக்கி மற்போர் காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர். அவர்கள் செவ்விதழ்களில் இளநகை அரும்பிய போதெல்லாம், எதிர்ப்புறம் நின்றிருந்த பூம்புகார் இளைஞர் உள்ளங்களில் உவகை மலர்ந்தது. பொன்னிறத்துப் பூங்கரங்களில் வளைகள் ஒலித்த போதெல்லாம் அங்கே கூடியிருந்த இளைஞர் நினைவுகளில் அவ்வொலி எதிரொலித்தது. அவர்கள் மென்பாதங்களில் மாணிக்கப் பரல் பொதித்த சிலம்பு குலுங்கின போதெல்லாம் இளைஞர் தம் தோள்கள் பூரித்தன. அல்லிப் பூவின் வெள்ளை இதழில் கருநாவற்கனி உருண்டாற்போல் அவர்கள் விழிகள் சுழன்ற போதெல் லாம் இளைஞர் எண்ணங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/13&oldid=1141575" இலிருந்து மீள்விக்கப்பட்டது