பக்கம்:மணி பல்லவம் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

129

வில்லை. இவையெல்லாமே பேராச்சரியங்கள் தான், ஒன்றா, இரண்டா, திடீரென்று இந்த மாளிகையே பேராச்சரியமாகி விட்டது” என்று சொல்லிக் கொண்டே வந்த சுரமஞ்சரியின் பவழ மெல்லிதழ்களை முன்னால் நீண்ட வசந்தமாலையின் பூங்கமலக் கை மேலே பேச விடாமல் மெல்லப் பொத்தியது. திடீரென்று இருந்தாற் போலிருந்து தோழிப் பெண் தன் வாயைப் பொத்தியதைக் கண்டு சுரமஞ்சரிக்கு அடக்க முடியாத சினம் மூண்டது.

“அம்மா! பேச்சை நிறுத்திவிடுங்கள், யாரோ மிக அருகிலிருந்து நாம் பேசுவதை ஒட்டுக் கேட்கிறார்கள்” என்று சுரமஞ்சரியின் காதருகில் ரகசியமாய் முணு முணுத்தாள் தோழி வசந்தமாலை. இதை முணுமுணுக்கும் போது தோழியின் குரல் அதிர்ச்சியும் நடுக்கமும் விரவியதாயிருந்தது. தோழியின் இந்த எச்சரிக்கைக் குரல் காதில் ஒலித்திருக்க வில்லையானால் திடீரென்று அவள் மதிப்பின்றித் தன் வாயைப் பொத்தியதனால் தனக்கு மூண்டிருந்த கோபத்தில் அவளுடைய கன்னத்தில் பளீரென்று அறைந்திருப்பாள் சுரமஞ்சரி.

“அதோ அந்தப் பட்டுத்திரை காற்றில் அசைகிறதே அதன் கீழ் பாருங்கள் அம்மா!” என்று மறுபடியும் சுரமஞ்சரியின் காதருகில் முணுமுணுத்தாள் தோழி. அவள் சுட்டிக் காட்டிய திசையில் சுரமஞ்சரியின் பார்வை சென்றது. பார்த்தவுடன் அவள் கண்களில் பீதி நிழல் படிந்தது. அவள் திடுக்கிட்டாள்.

அலங்கார மண்டபத்தின் முகப்புத் திரைச்சீலை மேலே எழுந்து தணியும் நீரலை போல் அப்போது வீசிய காற்றில் ஏறி இறங்கியது. திரைச்சீலை மேலெழுந்தபோது பூ வேலைப்பாடுகள் பொருந்திய அந்தப் பட்டுத் துணியின் மறுபுறம் யாரோ நின்று கொண்டிருப்பதற்கு அடையாளமாக இரண்டு பாதங்கள் தெரிந்தன. சுரமஞ்சரி பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்தப் பாதங்கள் அங்கிருந்து நகர முற்பட்டன.

ம-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/130&oldid=1141803" இலிருந்து மீள்விக்கப்பட்டது