பக்கம்:மணி பல்லவம் 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

செய்திருந்தன. எதிர்பாராத நிகழ்ச்சிகள் நிகழுவதற்கு முன் நிலவுகிறாற் போன்றதொரு மர்மமான சூழ்நிலையாகத் தோன்றியது அது.

தான் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து பின்புறம் நன்றாகத் திரும்பித் தவச்சாலைக்குள் சுவடிக்கும், தீபத்துக்கும் அருகில் வந்திருப்பது யார் என்று பார்க்குமுன் ‘அப்படிப் பார்க்க வேண்டும்’ என்பதுபோல் தன் உள்ளுணர்வே தன்னை எச்சரிக்கை செய்து தயங்க வைப்பது அவருக்கு மேலும் திகைப்பளித்தது. செயலுணர்வுக்கு முன்னதாக உள்ளுணர்வு தயங்கும் காரியங்கள் நல்ல விளைவைத் தருவதில்லை என்பது அவர் அநுபவத்தில் கண்டிருந்த உண்மை. அப்போது, அந்தத் தவச்சாலையில் அவருக்குத் தெரிய வேண்டியது தம் வீட்டிலிருந்து காணாமற் போன அருட்செல்வ முனிவர் அங்கே வந்திருக்கிறாரா, இல்லையா என்பதுதான். முனிவர் தவச்சாலைக்கு வரவில்லை என்றால் நிம்மதியாக அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர வேறொன்றும் அவர் செய்ய வேண்டியதில்லை. முனிவர் அங்கே வந்திருக்கிறார் என்றால் தன் இல்லத்திலிருந்து அவர் சொல்லிக்கொள்ளாமல் வெளியேறியது ஏன் என்றும் தவச்சாலையில் தன்னைச் சந்திக்கத் தயங்கித் தனக்கு முன் வராமல் மறைந்தது என்ன காரணத்தினால் என்றும் அவரையே கேட்டுத் தெரிந்து கொண்டு விட வேண்டும் என்றும் வளநாடுடையார் விரும்பினார். தவச்சாலையில் சுவடியையும், தீபத்தையும் வைத்து வாசித்துக் கொண்டிருந்த முனிவர் தாம் தன் வரவைக் கண்ணுற்றும் அப்போது தம்மைக் காண விரும்பாமல் ஒளிந்து மறைந்து கொண்டிருக்க வேண்டும் என்று வளநாடுடையார் மனத்தில் சந்தேகப்பட்டார். தமது சந்தேகம் மெய்யாயிருந்து முனிவரும் அப்படி நடந்து கொண்டிருந்ததால்தான், ‘என்னைக் கண்டு ஏன் ஒளிந்து கொண்டீர்?’ என்று முனிவரை அவர் கேட்க விரும்பினார். ஆனால் அவர் விரும்பியவாறு எதுவும் இங்கு நடைபெறவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/132&oldid=1141806" இலிருந்து மீள்விக்கப்பட்டது