பக்கம்:மணி பல்லவம் 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

133

தன் கண்களைத் தீச்சுடர் கூசச் செய்யும் நிலையில் எதிர்ப்புறத்து இருளிலிருந்து துள்ளிவரும் வேலை எட்டிப் பிடிக்கத் தெரிந்தவன் சாதாரணமானவனாக இருக்க முடியுமென்று தோன்றவில்லை வளநாடுடையாருக்கு. ஆனால் அவர் அப்போது உடனடியாக நினைக்க வேண்டியது, நெருப்பை அணைக்க ஏதாவது செய்ய முடியுமா என்று முயலும் முயற்சியாயிருந்ததனால் எதிராளி வேலை மறித்துப் பிடித்துவிட்ட திறமையை வியப்பதற்கு அவருக்கு அப்போது நேரமில்லை.

தவச்சாலையின் கூரைமேல் நெருப்பு நன்றாகப் பற்றிக் கொண்டு எரியத் தொடங்கியிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நெருப்பு மூட்டியவன் அங்கிருந்து எப்படியோ நழுவியிருந்தான். போகிற போக்கில் அவர் வீசிய வேலையும் பறித்துக் கொண்டு போயிருந்தான் அந்தப் பாவி. எனவே கைத்துணையாக இருந்த வேலையும் இழந்து வெறுங்கையோடு தீப்பற்றிய பகுதியில் புகுந்து தீயை அணைக்கத் தம்மால் ஏதேனும் செய்ய இயலுமா என முயலவேண்டிய நிலையிலிருந்தார் அவர்.

உறுதியும், மனத்திடமும் கொண்டு தீப்பற்றிய பகுதியில் நுழைந்தே தீருவதென்று முன்புறம் நோக்கி நடக்கப் பாதம் பெயர்த்து வைத்த வளநாடுடையார் மேலே நடக்காமல் திகைத்து நின்று கொண்டே தமக்கு இரு புறத்திலும் மாறிமாறிப் பார்த்தார். இருபுறமும் நெஞ்சை நடுக்குறச் செய்யும் அதிசயங்கள் தென்பட்டு அதிர்ச்சி தந்தன. உற்றுப் பார்த்ததால் அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த இடத்தில் அவருக்கு இருபக்கங்களிலும் முன்னும் பின்னும் சிறிது தொலைவு வேலிபோலப் படர விடப்பட்டிருந்த மாதவிக் கொடிகளின் அடர்த்தியிலிருந்து கூரிய மூங்கில் இலைகள் சிலிர்த்துக் கொண்டெழுந்தாற் போல் பளபளவென்று மின்னும் வேல் நுனிகள் தெரிந்தன. அவசரப் பார்வைக்குச் சற்றுச் செழிப்பான மூங்கில் இலைகளைப் போலத் தோன்றிய அவை உற்றுப் பார்த்தால் தம்மை வேல்முனைகளென நன்கு காட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/134&oldid=1141810" இலிருந்து மீள்விக்கப்பட்டது