பக்கம்:மணி பல்லவம் 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

மணிபல்லவம்

‘ஐயோ! தீப்பற்றி எரிகிறதே!’ என்று பதறி ஒலிக்கும் குரல்களும் ‘ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்! தீயை அணைத்து யாரையாவது காப்பாற்ற வேண்டியிருந்தாலும் காப்பாற்றலாம்’ என்று விரைந்து கேட்கும் சொற்களும் திமுதிமுவென்று ஆட்கள் ஓடிவரும் காலடி ஓசையும் தவச்சாலையை நெருங்கிக் கொண்டிருந்தபோது தமக்கு இருபுறமும் நீண்டிருந்த வேல்கள் மெல்லப் பின்னுக்கு நகர்ந்து மறையும் விந்தையை வளநாடுடையார் கண்டார். அதையடுத்து மாதவிப் புதரின் அப்பால் இருபுறமும் மறைவாக இருந்த ஆட்கள் மெல்ல அங்கிருந்து நழுவுவதையும் அவர் உணர முடிந்தது. அந்தச் சமயத்தில் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. மாதவிக் கொடிகளுக்கு மறு பக்கத்திலிருந்து ஒரு வேல் பாய்ந்து வந்து வளநாடுடையாருக்கு முன் ஈரமண்ணில் குத்திக் கொண்டு நின்றது. அந்த வேல் வந்து குத்திக் கொண்டு நின்ற அதே நேரத்தில், “பெரியவரே! உங்களுக்கு மிகவும் நன்றி. நீங்கள் வீசி எறிந்த வேலை இதோ திருப்பித் தந்தாகி விட்டது. எடுத்துக் கொண்டு பேசாமல் வந்த வழியோடு போய்ச் சேருங்கள்” என்ற சொற்களை இரைந்து கூறிவிட்டு ஏளனமாகச் சிரித்துக் கொண்டே கொடி வேலிக்கு பின்புறமிருந்து யாரோ ஓடிச்சென்று மறைவதையும் வளநாடுடையார் கவனித்தார். அப்போது அவருடைய நிலை தவிப்புக்குரிய இரண்டுங்கெட்டான் நிலையாக இருந்தது. இருதலைக் கொள்ளி எறும்பு போல் செய்வதறியாமல் வருந்தி நின்றார் அவர். அங்கே தீயின் நிலையோ அணைக்கலாம் என்று நினைக்கவும் இயலாதபடி பரவிப் பெருகிவிட்டது. இங்கே மறைந்திருந்த ஆட்களோ தப்பி விட்டார்கள். அந்நிலையில் தீப்பற்றி எரியும் தவச் சாலைக்குமுன் தாம் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பது எப்படியெப்படியோ பிறர் தம்மேல் சந்தேகம் கொள்ள ஏதுவாகலாம் என்று தோன்றியது வளநாடுடையாருக்கு. ‘தவச்சாலைக்குத் தீ முட்டியதே அவர்தான்’ என்று வருகிறவர்கள் நினைத்துவிட்டாலும் வியப்படை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/137&oldid=1141815" இலிருந்து மீள்விக்கப்பட்டது