பக்கம்:மணி பல்லவம் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13

சுழன்றன. மற்போரும் களத்தில் நடந்து கொண்டுதான் இருந்தது.

ஆனால், இவற்றையெல்லாம் அலட்சியம் செய்தவன் போல் ஒதுங்கி நின்று கொண்டிருந்த தீரன் ஒருவனும் அந்தக் கூட்டத்தில் இருந்தான். கூட்டத்தில் அவன் நின்ற இடம் தனியாய்த் தெரிந்தது. கைகளைக் கட்டியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நின்று கொண்டிருந்த அந்த அழகிய இளைஞன் பார்வையிலிருந்தும் நின்ற விதத்திலிருந்தும் தான் எதற்கும் அஞ்சாதவன், எதற்கும் கவலைப்படாதவன் என்று தன்னைப் பற்றி அநுமானம் செய்து கொள்ள வைத்தான். அவனுக்குப் பணிந்து வணக்கம் செய்யக்கூடியவர்கள் போல் தோற்றமளித்த நாலைந்து விடலைத்தனமான இளைஞர்களும் அவனைச் சூழ்ந்து நின்றனர். செந்தழல்போல் அழகிய சிவப்பு நிறமும், முகமும், எழில் வடிந்த நாசியும், அழுத்தமான உதடுகளும், அவனுடைய தோற்றத்தைத் தனிக்கவர்ச்சியுடைய தாக்கிக் காட்டின, அமைந்து அடங்கிய அழகுக் கட்டு நிறைந்த உடல், அளவான உயரம், மிகவும் களையான முகம், இவற்றால் எல்லோரும் தன்னைக் காணச் செய்து கொண்டு, தான் எதையுமே காணாதது போல் மற்போரை மட்டும் கவனித்துக் கொண்டு நின்றான் அந்த இளைஞன். இணையற்ற - அழகுக்குச் சரிசமமாக அவனுடைய விழிகளின் கூரிய பார்வையில் அஞ்சாமையின் சாயல் அழுத்தமாகத் தெரிந்தது. ‘இவன் நம் பக்கம் சற்றே விழி - சாய்த்துப் பார்க்கமாட்டானா’, என்று முறுவலுக்கும், வளையொலிக்கும் சொந்தக்காரர்கள் ஏங்க, எதற்குமே தான் ஏங்காதவன் போல் மற்போரில் கவனமாக நின்றிருந்தான் அந்த இளைஞன். ஏக்கங்களைப் பலருக்கு உண்டாக்கிக் கொண்டு நிற்கிறோம் என்பதையே உணராதவன்போல், தான் சிறிதும் ஏங்காமல் நின்றான். ஆசைகளுக்கு ஆசைப்படுகிற அழகாகத் தெரியவில்லை அது! ஆசைகளையே ஆசைப்பட வைக்கிற அழகாகத் தோன்றியது. அவ்வளவிற்கும் ஆடம்பரமான அலங்கா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/14&oldid=1141577" இலிருந்து மீள்விக்கப்பட்டது