பக்கம்:மணி பல்லவம் 1.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

மணிபல்லவம்

கமண்டலம், யோகதண்டம் முதலிய பொருள்களையெல்லாம், ஒவ்வொன்றாக எடுத்துக் காண்பித்தார் முனிவர்.

“தவச்சாலைக்கு யாரோ தீ வைக்கப் போகிறார்களென்று உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கும் போலிருக்கிறதே, முனிவரே?”

“ஆகா! தெரியாமலென்ன? நன்றாகத் தெரியும். யார் எதற்காக என்ன நோக்கத்துடன் தீ வைக்க வரப் போகிறார்கள் என்பதுகூட எனக்குத் தெரியும் உடையாரே. எந்த நாழிகையில் நெருப்பு வைக்க வருவார்களென்பதும் தெரியும். அதனால் தானே உங்கள் இல்லத்திலிருந்து சொல்லிக் கொள்ளாமல் அவசரமாகப் புறப்பட்டு வந்தேன்.”

“முனிவரே! நீங்கள் பெரிய தவறு செய்துவிட்டீர்கள் முன்பே தெரிந்திருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்துவிட்டீர்களே! என்னிடம் சொல்லியிருந்தால் எப்படியாவது முன்னேற்பாடு செய்து இது நடக்காமல் காத்திருக்கலாமே?”

“இருக்கலாம்! ஆனால் இதுதான் நடக்கவேண்டும் என்பது என்னுடைய ஆசையாக இருக்கும்போது நீங்கள் எப்படி இதைத் தடுக்க முடியும்? இன்று என்னுடைய தவச்சாலை தீப்பற்றி எரியாமற் போயிருந்தால்தான் நான் வருத்தப்பட நேர்ந்திருக்கும். அப்படியில்லாமல் அது அடியோடு எரிந்து போனதில்தான் எனக்குப் பெரு மகிழ்ச்சி.”

இதைக் கேட்டு, முனிவர் தம் நினைவோடுதான் பேசுகிறாரா அல்லது மனம் வெறுத்துப் போய் இப்படிப் பிதற்றுகிறாரா என்று புரியாமல் திகைத்துப் போய் விட்டார் வளநாடுடையார்.

“உங்களைத் தேடிக்கொண்டுதான் நானும் தவச்சாலைக்கு வந்தேன். அங்கே சுவடி விரித்தபடியிருந்தது, தீபமும் எரிந்து கொண்டிருந்தது. ஆகையால் நீங்கள் உள்ளேதான் இருப்பீர்களென நினைத்தேன்”— என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/141&oldid=1141820" இலிருந்து மீள்விக்கப்பட்டது