பக்கம்:மணி பல்லவம் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

145

பிரும்மாண்டமான அந்தப் படைக்கலச் சாலை, கட்டிடங்களும், மாளிகைகளும், யானைகள் குதிரைகளைக் கட்டும் சிறுசிறு கூடங்களும் உள்ளடங்கிய மிகப் பெரிய சோலையில் நான்கு புறமும் சுற்று மதில்களோடு அமைந்திருந்தது. வேல், வாள் போன்ற படைக்கலங்களை உருக்கி வார்க்கும் உலைக் கூடங்களும் அதற்குள் அமைந்திருந்தன. அதனால் உலைக் கூடங்களில் வேல்களையும் வாள்களையும் வடித்து உருவாக்கும் ஒலியும் அங்கிருந்து எழுந்து பரவிக் கொண்டிருந்தது. படைக்கலச் சாலையின் எல்லையாகிய மதிற்சுவருக்கு அப்பால் காவிரிப் பூம்பட்டினத்திலேயே வயது முதிர்ந்ததும் எண்ணற்ற விழுதுகளை ஊன்றி மண்ணின் மேல் உரிமை கொண்டாடுவதுமான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது.

ஒரு பேரரசன் கோட்டை கொத்தளங்களோடு அரண்மனை அமைப்பதற்குத் தேவையான நிலப்பரப்பைக் காட்டிலும் சற்று மிகுதியான நிலப்பரப்பிலும் தன் நிழல் பரப்பில் வீழ்தூன்றிப் படர்ந்து பரந்திருந்த அந்த ஆலமரத்தை அணுகினாற்போல் சிவன் கோவில் ஒன்றும் இருந்தது; பூம்புகார் மக்களின் பேரருட் செல்வனான முக்கண் இறைவன் கோவில் கொண்டிருந்த அந்த இடத்துக்கு ஆலமுற்றம்[1] என்று பெயர் வாய்த்திருந்தது.

‘ஆலமுற்றத்து அண்ணலார்’ என்று அந்தப் பகுதி மக்கள் கொண்டாடும் இந்த இறைவனுக்கு அடுத்தபடியாக அங்கே பெருமை வாய்ந்தவர் நீலநாக மறவர்தாம். அவருடைய படைக்கலச் சாலைக்கும்; ஆலமுற்றத்துக் கோவிலுக்கும் அப்பால் வெண்பட்டு விரித்தாற்போல் கடற்கரை மணல்வெளி நீண்டு அகன்று நோக்கு வரம்பு முடியும்வரை தெரிந்தது. நீலநாக மறவரின் படைக்கலச்


  1. ஆலமுற்றத்து இறைவன் கோவில் அந்தக் காலத்துப் பூம்புகாரில் அமைந்திருந்ததை அகநானூறு 181வது பரணர் பாட்டால் அறிய முடிகிறது.

ம-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/146&oldid=1141825" இலிருந்து மீள்விக்கப்பட்டது