பக்கம்:மணி பல்லவம் 1.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

மணிபல்லவம்

சாலையிலும் அதைச் சூழ்ந்திருந்த பகுதிகளிலும் வீரத் திருமகள் கொலு வீற்றிருப்பதைப் போன்றதொரு கம்பீரக் களை எப்போதும் நிலவிக் கொண்டிருந்தது. எப்போதும் கண்ணுக்கு நிறைவாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

இளங்குமரனும், மற்ற நண்பர்களும் நேராகப் படைக்கலச் சாலையில் மடைப்பள்ளிக்குச் சென்று வயிறு நிறைய உணவருந்தினார்கள். எப்போது வந்தாலும் எத்துணைப் பேரோடு வந்தாலும், தங்கள் சொந்த இல்லத்தைப்போல் கருதித் தங்கிக் கொள்ளவும், பழகவும் தம்முடைய பழைய மாணவர்களுக்கு உரிமையளித்திருந்தார் நீலநாக மறவர். இளங்குமரன், கதக்கண்ணன் போன்ற சிறப்பும் நெருக்கமும் உள்ள மாணவர்களுக்கு அந்த உரிமை சற்று மிகையாகவே உண்டு. நீலநாக மறவரின் பெருமைக்கும், வீரத்துக்கும் முன்னால் எப்போதும் எல்லோரும் மாணவர்கள்தாம். வீரம் விளைகின்ற வளமான நிலம் அது. அந்த நிலத்தில் அதன் வீர விளைவுக்குக் காரணமான பெருமகனுக்கு முன்னால் இளைஞர்கள் வணங்கியபடி வருவதும், பணிந்து கற்பதும், வணங்கியபடி செல்வதும் பழமையான வழக்கங்கள். ஆலமுற்றத்தின் மாபெரும் ஆலமரத்தைப் போலவே நிறைய வீழ்து ஊன்றிப் படர்ந்த புகழ்பெற்றவர் நீலநாக மறவர், அவருடைய பெரு நிழலில் தங்கிப் படைக்கலப் பயிற்சி பெற்றுச் சென்றவர்க்கும் இப்போது பயிற்சி பெறுகிறவர்களுக்கும், இனிமேல் பயிற்சி பெறப் போகிறவர்களுக்கும் ஆல நிழல்போல் பரந்து காத்திருந்தது அவருடைய படைக்கலச் சாலை.

உணவு முடிந்ததும் கதக்கண்ணனும் மற்ற நண்பர்களும் பின் தொடர நீலநாக மறவர். நின்று கொண்டிருந்த பகுதிக்கு விரைந்து சென்றான் இளங்குமரன். எதிரே அவனைக் கண்ட ஊழியர்களும் பயிற்சி பெற வந்திருந்த மாணவர்களும், வேறு பல வீரர்களும் மலர்ந்த முகத்தோடு வணக்கம் செலுத்தி வரவேற்றார்கள். பெருமதிப்போடு வழி விலகி நின்று கொண்டார்கள். இளங்குமரனை வளர்த்தவர் அருட்செல்வ முனிவர் என்றாலும் நீலநாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/147&oldid=1141827" இலிருந்து மீள்விக்கப்பட்டது