பக்கம்:மணி பல்லவம் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

மணிபல்லவம்

சோதனை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நீலநாக மறவர். அத்தகைய சூழ்நிலையில் நடுவே புகுந்து குறுக்கிட்டுத் தன் வரவைத் தெரிவித்துக் கொள்ள வேண்டாம் என்று கருதிய இளங்குமரன் உடன் வந்த நண்பர்களோடு ஒருபுறமாக ஒதுங்கி நின்றான்.

பொய்கை நீரிலே வடிவு பார்த்து குறி வைத்து மேலே மரத்திலே உள்ள காய்களை எய்யும் முயற்சியில் அங்கிருந்த இளைஞர்கள் எவருக்குமே வெற்றி இல்லை. அதைக் கண்டு நீலநாக மறவருடைய கண்கள் மேலும் சிவந்து சினக்குறிப்புக் காட்டின. மீசை நுனிகள் துடித்தன. ஆத்திரத்தோடு கூறலானார். “இளைஞர்களே! ஒரு பொருளைக் குறி வைத்து எய்வதற்கும் உடலின் பலமும் கைகளின் வலிமையும் மட்டுமே போதாது. நினைவும் ஒன்றில் இலயிக்க வேண்டும். எண்ணங்கள் ஒரே புள்ளியில் இணைய வேண்டும். தியானம் செய்வதற்கு மனம் ஒருநிலைப்படுவது போல் பொருளைக் குறிவைத்து எய்யும் விற்கலை முயற்சிக்கும் ஒருமைப்பாடு வேண்டும். நாளுக்கு நாள், எண்ணங்களை ஒன்றில் குவியவைத்து முயலும் ஆற்றல் குறைந்து கொண்டே வருகிறது. உங்கள் நிலையைப் பார்த்தால் வருகிற தலைமுறைகளில் வில்வித்தை போன்ற அரிய கலைகளே இல்லாமற் போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். மனம் வசப்படாமல் கைகள் மட்டும் வசப்பட்டு ஒரு பயனுமில்லை. என் போன்றவர்கள் கற்பிப்பதற்கு விற்குறிகள் வேண்டும். ஆனால் எங்கு நோக்கினும் உங்களைப் போன்ற தற்குறிகளைத்தான் நான் காண்கிறேன்” என்று இடிக் குரலில் முழங்கிக் கொண்டே சுற்றி நின்றவர்களை ஒவ்வொருவராகப் பார்க்கத் தொடங்கிய நீலநாக மறவர். ஒரு மூலையில் அடக்க ஒடுக்கமாய் வந்து நின்றிருந்த இளங்குமரனையும் மற்றவர்களையும் கண்டு கொண்டார். ஒலி ஓய்ந்தும் தொனி ஓயாத அவருடைய கம்பீரக் கட்டளைக் குரலில் சுற்றி நின்ற இளைஞர்கள் எல்லாம் பேச்சடங்கிப் புலனடங்கி நின்ற போது அவர் தம் கையிலிருந்த வில்லைக் கீழே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/153&oldid=1141837" இலிருந்து மீள்விக்கப்பட்டது