பக்கம்:மணி பல்லவம் 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

மணிபல்லவம்

அளிக்கப் போகும் பரிசு. புறம் பேசுகிற நாவை வளரவிடக் கூடாது. புறம் பேசுகிற நாவுடையவர்களைப் படைத்ததைக் காட்டிலும் கைதவறின காரியம் ஒன்றைப் படைப்புக் கடவுள் செய்திருக்கவே முடியாது. உலகத்திலுள்ள நஞ்செல்லாம் புறம் பேசுகிறவர்களின் நாவிலிருந்து பிறந்தது. வேறு எல்லாக் கெட்ட மனிதர்களும் சோற்றிலும், தண்ணீரிலும் நஞ்சு தூவுவார்கள். புறம் பேசுகிறவர்களோ காற்றிலும் நஞ்சைத் தூவுவார்கள். காண்பவர், கேட்பவர் நெஞ்சிலும் நஞ்சைக் கலந்து விடுவார்கள்.”

இப்படிக் கொதிப்போடு பேசிய கதக்கண்ணனை உறுத்துப் பார்த்தான் அந்த வேளிர் குலத்து இளைஞன்.

“பார்வையால் மருட்டாதீர். உங்கள் முன்னோர்கள் எல்லாம் சோழப் பேரரசருக்கு வீர உதவிகள் புரிந்து பெருமைப் பட்டிருக்கிறார்கள். அத்தகைய வேளிர் குடியில் புறம் பேசுவதை வீரமாக எண்ணும் கோழைகள் பிறந்திருக்கிறார்கள் என்பதை நினைப்பதற்கு வெட்கமாயிருக்கிறது எனக்கு” என்று கூறிவிட்டு மாமரத்தடிக்குத் திரும்பிச் சென்று நண்பர்களோடு அமர்ந்து கொண்டான் கதக்கண்ணன்.

தாங்கள் இளங்குமரனைத் துச்சமாகப் பேசி இகழ்ந்த செய்தி நீலநாக மறவர் காதுவரையில் எட்டிவிடக் கூடாதே என்று பயந்து கொண்டே அந்த இளைஞர்களும் கூசியபடி மேலே நடந்து சென்றார்கள்.

தனியாக நீலநாக மறவரோடு சென்றிருந்த இளங்குமரன் சில நாழிகைக்குப்பின் மரத்தடிக்குத் திரும்பி வந்தான். கூட்டமாக உட்கார்ந்திருந்த நண்பர்களுக்கிடையே அமராமல் கதக்கண்ணனை மட்டும் தனியே அழைத்துக் கொண்டு வேறு பக்கம் சென்ற இளங்குமரன், “பட்டினப்பாக்கத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது நேற்று இரவில் நடந்த நிகழ்ச்சி பற்றி ஏதோ பேச்சுத் தொடங்கினாயே; அது என்ன? அதை இப்போது சொல்...” என்று அவனை வினவினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/159&oldid=1141921" இலிருந்து மீள்விக்கப்பட்டது