பக்கம்:மணி பல்லவம் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

165

இருக்கவேண்டும்” என்று தோழிக்கு வற்புறுத்தி எச்சரிக்கை செய்து அங்கிருந்து அவளை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள் சுரமஞ்சரி.

அப்படி வசந்தமாலையும், சுரமஞ்சரியும் சித்திர சாலையிலிருந்து வெளியேறிய அதே நேரத்தில் நிலா முற்றத்திலிருந்து கீழிறங்கிய வானவல்லியும் உடனிருந்த பெண்களும் எதிரே வந்து சேர்ந்தார்கள். ‘இவர்கள் யாரிடமும் இங்கு நடந்தது பற்றிப் பேச்சு மூச்சுக் காட்டாதே’ என்பதை மறுபடியும் கண்களின் பார்வைக் குறிப்பாலேயே தோழிக்கு வற்புறுத்தினாள் சுரமஞ்சரி.

“நீ உடனே திரும்பி வந்துவிடப் போகிறாய் என்று நாங்களெல்லாம் நிலா முற்றத்தில் காத்திருந்தோம் சுரமஞ்சரி! நீ வருகிற வழியாயில்லை. நேரமும் ஆகிவிட்டது. உன்னையும் அழைத்துக் கொண்டு உண்பதற்குப் போகலாம் என்று கீழே இறங்கி வந்து விட்டோம். தந்தையார் நம்மை எதிர்பார்த்து உண்ணாமல் காத்துக் கொண்டிருப்பார். வா, போகலாம்” என்று சுரமஞ்சரியை உணவுக்கு அழைத்தாள் வானவல்லி. உடனே எல்லாரும் மாளிகையின் கீழ்ப் பகுதியை நோக்கி உண்பதற்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அந்தப் பெரு மாளிகையின் உணவுக் கூடத்தில் பணியாரங்களின் நறுமணமும், அறுசுவை உண்டிகளின் மணமும் கலந்து பரவிக் கொண்டிருந்தன. நெய்யின் கமகமப்பும் பால் நன்றாக வற்றக்காயும் முறுகிய வாசனையும், அந்தப் பக்கமாக வேறு காரியமாய் வர நேர்ந்தவர்களுக்குக்கூட உண்ணும் ஆசையை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

சுரமஞ்சரியும் வானவல்லியும் வசந்தமாலை முதலிய மற்றப் பெண்களும் உணவுக் கூடத்துக்குள் நுழைந்த போது அங்கே ஏற்கனவே தந்தையாரும், நகை வேழம்பரும் ஓவியன் மணிமார்பனும் உண்பதற்குச் சித்தமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு பக்கமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/166&oldid=1141953" இலிருந்து மீள்விக்கப்பட்டது