பக்கம்:மணி பல்லவம் 1.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

167

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பெண்ணே! நம் மாளிகைச் சமையற்காரர்களைப் பற்றி நீ வேண்டுமென்றே மிகைப்படுத்திக் குற்றம் சொல்கிறாய், எப்போதாவது கொஞ்சம் உப்பைக் கூடப் போட்டிருப்பார்கள். ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்ற பழமொழி இருக்கிறதல்லவா? நமது மாளிகையில் உண்டு சென்றவர்கள் நீண்ட காலம் நம்மை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்றும், அப்படி நம்மை நினைப்பதற்காகவே அவர்கள் நீண்ட காலம் இருக்க வேண்டுமென்றும்தான் நமது சமையற்காரர்கள் இப்படி உப்பை அதிகமாகப் போடுகிறார்கள் போலிருக்கிறது” என்று அன்னை கூறியபோது சிரிப்பொலி முன்னைக் காட்டிலும் பெரிதாக எழுந்தது. நகைவேழம்பரும் சேர்ந்து கொண்டு சிரித்தார். அந்த மனிதரின் ஒற்றைக் கண்ணோடு கூடிய முகத்துக்குச் சிரிப்பு நன்றாயில்லை. பேய் சிரிக்கிறாற்போல் விகாரமாக இருந்தது. செம்மையில்லாத கெட்ட கண்ணாடியில் முகம் பார்த்தது போல், சிரிக்கும்போது பூத பயங்கரம் காட்டியது நகைவேழம்பரின் முகம், குறும்புக்காரியான வானவல்லி விடாமல் மேலும் அந்த வம்புப் பேச்சை வளர்த்தாள்.

“நீ சொல்வதை நான் அப்படியே ஒப்புக் கொள்ள முடியாதம்மா! ஏனென்றால் காவிரிப்பூம் பட்டினத்துக் கடற்கரையில் உப்புக் காய்ச்சும் உப்பளங்கள் நிறைய இருக்கின்றன என்ற செய்தியையே நம் மாளிகை உணவு மூலமாகத்தான் மிகப் பலர் தெரிந்து கொள்ள நேர்ந்திருக்கிறது. அப்பாவைத் தேடி எத்தனையோ கடல் கடந்த தேசங்களிலிருந்து பெரிய வணிகர்கள், சிற்றரசர்கள் எல்லாம் நம் மாளிகைக்கு வந்து தங்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் இங்கு முதன் முறையாக உணவு உண்டு முடிந்தவுடன் அப்பாவைக் கேட்டிருக்கிற முதல் கேள்வி என்ன தெரியுமா? ‘உங்கள் நகரத்தில் நிறைய உப்பளங்கள் இருக்கின்றனவோ?’ என்பதுதான். நான்கு நாட்களுக்குமுன் இரத்தினத் தீவிலிருந்து வந்திருந்த வைர வணிகர்கூட இதே கேள்வியைத்தானே கேட்டார்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/168&oldid=1141962" இலிருந்து மீள்விக்கப்பட்டது