பக்கம்:மணி பல்லவம் 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168

மணிபல்லவம்

என்று தன் அன்னையிடம் வேடிக்கையாகக் கூறினாள் வானவல்லி. இப்படியே சிரிப்பும் கலகலப்புமாக, உற்சாகமும் உறையாடல்களுமாக உண்ணும் நேரம் கழிந்து கொண்டிருந்தது. சுரமஞ்சரியும், வசந்தமாலையும் மட்டும் சிரிப்போ, பேச்சோ இல்லாமல் எதையோ ஆழ்ந்து சிந்திப்பதுபோல் அமைதியாக அமர்ந்து உண்பதைத் தந்தையார் கவனித்து விட்டார். அந்த மௌனத்தின் காரணத்தைச் சுரமஞ்சரியிடமே நேரில் கேட்காமல் வானவல்லியிடம் கேட்டார் அவர்.

“வானவல்லீ! இன்றைக்கு உன் சகோதரி சுரமஞ்சரி மௌன விரதம் பூண்டிருக்கிறாளா என்ன? பேச்சுமில்லை; சிரிப்புமில்லை. பதுமைபோல் அமர்ந்து உண்கிறாளே!” தந்தையார் இப்படித் தூண்டிக் கேட்ட பின்பும், சுரமஞ்சரி ஒன்றும் பேசவில்லை. தன் சகோதரி சுரமஞ்சரியும் அவளுடைய தோழி வசந்தமாலையும் உற்சாகமாயில்லை என்பதை வானவல்லியும் கவனித்தாள். சகோதரி அப்படி அமைதியாயிருக்கும்போது தான் மட்டும் அதிகப் பிரசங்கியாக வம்பு பேசுவது நாகரிகமில்லை என்று உணர்ந்தவளாய் வானவல்லியும் பேச்சை நிறுத்திக் கொண்டு அமைதியாய் உண்ணத் தொடங்கினாள்.

“என்னடி, பெண்ணே ! உனக்கு உடல் நலமில்லையா? ஏன் இப்படி இருக்கிறாய்?” என்று தாய் சுரமஞ்சரியை விசாரித்தாள். “அதெல்லாம் ஒன்றுமில்லையம்மா!” என்று பெண்ணிடமிருந்து சுருக்கமாகப் பதில் கிடைத்தது தாயாருக்கு.

ஆனால் தந்தையார் சுரமஞ்சரியை அவ்வளவு எளிதில் விடவில்லை. எப்படியாவது அவளைப் பேச வைத்து விட வேண்டுமென்று முனைந்தவர் போல் மீண்டும் அவளிடம் நேரிலேயே பேசலானார்.

“சுரமஞ்சரீ! இன்று உனக்குச் சொல்ல வேண்டுமென்பதற்காக மிகவும் நல்ல செய்தி ஒன்று வைத்திருக்கிறேன். இதோ இந்த ஓவியனை நமது மாளிகையிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/169&oldid=1141965" இலிருந்து மீள்விக்கப்பட்டது