பக்கம்:மணி பல்லவம் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

மணிபல்லவம்

“அம்மா, இந்த ஒற்றைக் கண் மனிதருக்கு நகைவேழம்பர் என்று யார் பேர் வைத்தார்கள்? இவர் சிரிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லையே” என்று சுரமஞ்சரியின் காதருகில் மெல்லக் கேட்டாள் வசந்தமாலை. சுரமஞ்சரி உடனே தோழிக்கு மட்டும் கேட்கும்படி, “அது இவருடைய சொந்தப் பெயர் இல்லையடி வசந்தமாலை! கூத்தரங்குகளிலும், நாடக மேடைகளிலும், கூத்து, நாடகம் முதலியன தொடங்குமுன் கோமாளி வேடத்தோடு விதூடகன் ஒருவன் வருவது உண்டல்லவா? எதையாவது சொல்லி அவையிலிருப்பவர்களுக்கு நகைப்பு உண்டாக்கும் கலைஞர்களுக்கு[1] நகைவேழம்பர் என்று தமிழில் பெயர் உண்டு. எங்கள் தந்தையாரோடு வந்து சேர்ந்து கொள்வதற்கு முன்னால் இந்த மனிதர் நம் காவிரிப் பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு நாடக அரங்கில் நகைவேழம்பராக நடித்துப் பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தாராம். அதனால் அந்தத் தொழில் பெயர் இன்னும் இவரை விடாமல் பற்றிக் கொண்டு நிற்கிறது” என்று மறுமொழி கூறினாள்.

“இந்த மனிதருடைய குரூர முகத்தைப் பார்த்தால் வந்த சிரிப்புக்கூட போய்விடுமேயம்மா! இவரை எப்படி நாடக அரங்கில் நகை வேழம்பராக வைத்துக் கொண்டு பொறுமையாக நாடகம் நடத்தினார்கள்? பார்த்தவர்களும் தான் எப்படிப் பொறுமையோடு பார்த்தார்கள்? சிரிப்பு மூட்டுகிற முகமா இது? எரிந்த கொள்ளிக் கட்டையைப் போல் விகாரமாக இருக்கிறதே?” என்று மேலும் கேட்ட வசந்தமாலைக்கு, “இவர் நகைவேழம்பராக நடிப்பதைப் பொறுமையாகப் பார்க்க முடியாததனால்தானோ

என்-


  1. நகைவேழம்பர் - சிரிப்பு மூட்டும் பரியாசகர். அதாவது நகைச்சுவை நடிகர்கள். ஆதாரம்; சிலப்பதிகாரம் 5-ம் காதை 53-வது அடி. வேழம்பர் - ‘பலவகையால் நகுவித்துத் தாம்பயன் கொண்டு ஒழிவார்’ என்று 817-வது குறளுரையில் பரிமேலழகர் கூறியுள்ளார்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/171&oldid=1141973" இலிருந்து மீள்விக்கப்பட்டது