பக்கம்:மணி பல்லவம் 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

மணிபல்லவம்

தற்செயலாக நடந்து உடன் வருபவர்களைப் போல் சுரமஞ்சரியும் தோழியும் நகைவேழம்பரோடுகூட நடந்தார்கள். அவர்களும் உடன் வருவதைக் கண்ட நகைவேழம்பரின் நடை இன்னும் துரிதமாயிற்று. ஓவியனும் அதற்கு ஏற்பத் துரிதமாக நடந்தான். விரைவாய்த் தங்களைக் கடந்து அடுத்த கூடத்துக்குள் நுழைந்து முன்னால் போய் விடுவதற்காக அவர் முந்துகிறார் என்பது சுரமஞ்சரிக்கும், தோழிக்கும் புரிந்தது. உடனே அவர்களும் விட்டுக் கொடுக்காமல் தங்கள் நடையையும் வேகமாக்கினார்கள்.

ஆயினும் அவர்களைக் கடந்து பாய்ந்து முந்திச் செல்வதுபோல் ஓவியனை இழுத்துக் கொண்டு அடுத்த கூடத்துக்குள் காலெடுத்து வைத்துவிட்டார் நகை வேழம்பர். மேலே அவரைத் தொடர்ந்து நடப்பது சாத்தியமில்லை என்றுணர்ந்து சுரமஞ்சரி வார்த்தைகளால் அவரைத் தடுத்து நிறுத்தினாள்!

“ஐயா! ஒரு விநாடி நின்று போகலாமல்லவா? உங்களிடம் சிறிது பேச வேண்டும்.”

முன்புறம் விரைந்து கொண்டிருந்த நகைவேழம்பர் திரும்பி நின்றார். “என்ன பேசவேண்டும் சுரமஞ்சரி தேவீ! சொல்லுங்கள். கேட்கிறேன். எனக்கு அவசரமாகப் போக வேண்டும். நேரமாகிறது.”

போகலாம்! ஆனால் இவ்வளவு தலைபோகிற அவசரம் வேண்டியதில்லை ஐயா! நீங்கள் நெடுங்காலத்துக்கு முன் கூத்தரங்குகளில் நடித்துக் கொண்டிருந்த நாட்களில் முகத்துக்கு அரிதாரமும், கண்ணுக்கு மையும் கால்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பும் இட்டுக் கொண்டு அழகாக இருந்ததாக சொல்வார்கள். கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், இத்தனை காலத்துக்குப் பின் காலுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசிக் கொள்ளும் ஆசை உங்களுக்குத் திடீரென்று எப்படி ஐயா உண்டாயிற்று? அதுவும் இவ்வளவு நன்றாகச் சிவப்புநிறம் பற்றும் செம்பஞ்சுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/175&oldid=1141978" இலிருந்து மீள்விக்கப்பட்டது