பக்கம்:மணி பல்லவம் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17

“நீங்கள் எதையுமே அதிகமாகப் புகழும் வழக்கமில்லையே, இன்றைக்கு ஏனோ இப்படி...?” என்று தொடங்கிய அவள் தோழி வசந்தமாலை சொற்களில் சொல்ல ஆரம்பித்ததைச் சொற்களால் முடிக்காமல் தன் நளினச் சிரிப்பில் முடித்து நிறுத்தினாள்.

களத்தில் மற்போர் விறுவிறுப்பான நிலையை அடைந்திருந்தது. இருவரில் வெற்றி யாருக்கு என்று முடிவு தெரிய வேண்டிய சமயம் நெருங்கிக் கொண்டிருந்தது. எல்லோருடைய உள்ளமும் அந்த விநாடியை ஆவலோடு எதிர்கொள்ளத் தவித்துக் கொண்டிருந்தது. இன்னாரென்று தெரியாமல் இன்ன காரணம் என்று விளங்காமல் எல்லாருடைய மனத்திலும் அநுதாபத்தைப் பெற்றுக் கொண்டிருந்த அந்தத் தமிழ் இளைஞனே வெல்ல வேண்டுமென்று அனைவரும் எதிர்பார்த்தனர். அவன் தோற்றால் அத்தனை பேருடைய உள்ளமும் தோற்றுவிடும் போலிருந்தது. களத்தில் அவனுடைய கவர்ச்சி வளரும். விழிகளில் சோர்வு தெரிந்தபோதெல்லாம் காண்போர் விழிகளில் பதறி அஞ்சும் நிலை தெரிந்தது. பொன்வார்த்து வடித்து அளவாய் அழகாய்த் திரண்டாற் போன்ற அவன் தோள்கள் துவண்ட போதெல்லாம் சித்திரப் பல்லக்கிலிருந்த எட்டி குமரன் வீட்டுப் பெருஞ்செல்விக்குத் தன் நெஞ்சமே துவண்டுபோய் விட்டது.

றுதியாக எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த விநாடியும் வந்தது. வேரற்றுச் சாயும் அடி மரம்போல் யவனமல்லன் விழி பிதுங்கி, மணற்பரப்பில் சாய்ந்தான். இளங்குமரன் வென்றான். வெற்றி மகிழ்ச்சியில் கூட்டம் அடங்காத ஆரவாரம் செய்தது! அவனுடைய நண்பர்களோ களத்துக்குள் ஓடிவந்து அவனை அப்படியே மேலே தூக்கிவிட்டனர். இந்திர விழாவுக்காக அங்கே வந்திருந்த மலர்க்கடையிலிருந்து முல்லை மாலை ஒன்றை வாங்கிக் கொணர்ந்து அவன் கழுத்தில் சூட்டினான் உடனிருந்த நண்பர்களில் ஒருவன். வெற்றிக் களிப்போடு அவன் அழகு திகழச் சிரித்துக் கொண்டு நின்றபோது,

ம-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணி_பல்லவம்_1.pdf/18&oldid=1141582" இலிருந்து மீள்விக்கப்பட்டது